சவுதி இளவரசருடன் கர்தினால் Beshara Rai சவுதி இளவரசருடன் கர்தினால் Beshara Rai  

யூத நாடு பற்றிய சட்டம், ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது

இஸ்ரேலில் கொண்டுவரப்படவுள்ள சட்டம், சனநாயகமற்றது மற்றும் பன்மைத்தன்மைக்கு எதிரானது என, கர்தினால் ராய் அவர்கள் கூறியுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,24,2018. இஸ்ரேல் நாடாளுமன்றம் ஆதரவாக வாக்களித்துள்ள, இஸ்ரேல் யூதர்களின் நாடு என்பதை ஏற்கும் சட்ட முன்வரைவு, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது மற்றும், இது கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் ஒதுக்குகின்றது என்று, லெபனான் மாரனைட் கத்தோலிக்க வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால், Beshara Rai  அவர்கள் கூறியுள்ளார்.

லெபனானின் Farayaவில் இஞ்ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் Rai  அவர்கள், அங்குக் கூடியிருந்த விசுவாசிகளிடம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் இந்நடவடிக்கை தரமற்றது எனவும், இஸ்ரேலின் தலைநகராக ஏற்கனவே எருசலேமை அறிவித்திருப்பதோடு இந்நடவடிக்கை தொடர்புடையது எனவும் கூறினார்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் இந்நடவடிக்கைக்கு, ஒரு கத்தோலிக்கத் தலைவரிடமிருந்து, முதன்முறையாக இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிலும், அதன் ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளிலும், கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ் சபையினர், பிற கிறிஸ்தவ சபையினர் மற்றும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்றும், இந்த மக்களை மேலும் மேலும் ஒதுக்குவதற்கு யூதர்களுக்கு உரிமை கிடையாது என்றும் உரைத்துள்ள கர்தினால் ராய் அவர்கள், ஐ.நா.வும், ஐ.நா. பாதுகாப்பு அவையும் இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய தீர்வு காணுமாறு வலியுறுத்தியுள்ளார்.  

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், ஜூலை 19ம் தேதி இடம்பெற்ற வாக்கெடுப்பில், இஸ்ரேல் யூதர்களின் நாடு என்பதை ஏற்கும் சட்ட முன்வரைவுக்கு ஆதரவாக 62 பேரும், அதற்கு எதிராக 55 பேரும் வாக்களித்துள்ளனர். இந்த முன்வரைவுக்கு, பாலஸ்தீனிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  Knesset எனப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றம், இஸ்ரேல் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, ஓராண்டு சென்று, 1949ம் ஆண்டில் முதன்முறையாகக் கூடியது (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2018, 15:31