தேடுதல்

Vatican News
நிக்கராகுவா கர்தினால் Leopoldo José Brenes Solorzano நிக்கராகுவா கர்தினால் Leopoldo José Brenes Solorzano   (AFP or licensors)

போர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா

திருஅவையும் மக்களும் கூறும் சொற்களுக்கு நிக்கராகுவா அரசு செவி சாய்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம் - கர்தினால் Leopoldo José Brenes Solorzano

நிக்கராகுவா நாட்டின் மசாயா நகரில் குண்டு மழை பெய்துள்ளது என்றும், திருஅவையும் மக்களும் கூறும் சொற்களுக்கு அரசு செவி சாய்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம் என்றும், அந்நாட்டு கர்தினால் Leopoldo José Brenes Solorzano அவர்கள் கூறியுள்ளார்.

அரசுத்தலைவருக்கு எதிராக போராடிவரும் மக்களின் மையமாக மாறிவிட்ட மசாயா நகரில் ஜூலை 17, இச்செவ்வாய் முதல் ஆயிரக்கணக்கான இராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்று Aid to the Church that Suffers - ACS என்ற பிறரன்பு அமைப்பினருக்கு அளித்த பேட்டியில் கர்தினால் Brenes Solorzano அவர்கள் கூறியுள்ளார்.

போர்க்களத்தில் செயலாற்றும் மருத்துவமனையாக கத்தோலிக்கத் திருஅவை விளங்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய சொற்கள், தற்போது நிக்கராகுவா நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று கர்தினால் Brenes Solorzano அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டு, காயமுற்ற மக்களுக்கு, கத்தோலிக்க நிறுவனங்களும், பங்கு கோவில்களும் உதவிகள் செய்து வருவதால், அரசின் கவனம் தற்போது கத்தோலிக்க திருஅவையின் அனைத்து நிறுவனங்கள் மீதும் திருப்பப்பட்டுள்ளது என்று கர்தினால் Brenes Solorzano அவர்கள் எடுத்துரைத்தார்.

ACS அமைப்பைச் சார்ந்தவர்கள், நிக்கராகுவா மக்களுடன் மனதால் ஒன்றித்திருக்கிறோம் என்றும், விரைவில் அந்நாட்டிற்குத் தேவையான உதவிகளுடன் அங்கு செல்வோம் என்றும், இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Marco Mencaglia அவர்கள் கூறியுள்ளார்.

18 July 2018, 15:59