நிக்கரகுவா ஆயர்கள் நிக்கரகுவா ஆயர்கள் 

கர்தினால் Brenes – தலத்திருஅவையை அரசு நசுக்குகின்றது

நிக்கராகுவா அரசு, திருஅவையை துன்புறுத்தி வருகின்றது என்று, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் அரசை குறை கூறியுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் 

நிக்கராகுவா அரசுத்தலைவர் டானியேல் ஒர்த்தேகா அரசால், தலத்திருஅவை நசுக்கப்பட்டு வருகின்றது என்றும், அடக்குமுறைகளால் எப்போதும் துன்பங்களை அனுபவிக்கும் திருஅவைக்கு, இது புதிதல்ல என்றும் கூறியுள்ளார், நிக்கராகுவா கர்தினால் Leopoldo Brenes Solorzano.

நிக்கராகுவா ஆயர் பேரவைத் தலைவரும், நாட்டின் தேசிய கலந்துரையாடல் அவைத் தலைவருமான கர்தினால் Brenes அவர்கள், இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்காலத்தில் நிக்கராகுவா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் திருஅவை துன்புறுத்தப்பட்டு வருகின்றது என்றும் கூறியுள்ளார்.

மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவில், அரசியல் மற்றும்  சமூக நெருக்கடிகள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டுவரும்வேளை, தேசிய கலந்துரையாடலில் தலத்திருஅவை தொடர்ந்து இடைநிலை வகிக்க வேண்டுமா என்பது குறித்து, ஆயர்கள் இத்திங்களன்று நடத்திய கூட்டம் பற்றியும் கூறியுள்ளார், கர்தினால் Brenes.

இதற்கிடையே, நிக்கராகுவா எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முடிவுகட்டும் விதமாக, 2021ம் ஆண்டில் இடம்பெறுவதாகத் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல்களை, 2019ம் ஆண்டில் நடத்துமாறு ஆயர்கள், அரசுத்தலைவரை விண்ணப்பித்ததையடுத்து, திருஅவைக்கு எதிராகத் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன என செய்திகள் கூறுகின்றன.

அந்நாட்டில், கடந்த ஏப்ரல் பாதியில் தொடங்கிய அரசியல் பதட்டநிலை மற்றும் வன்முறையில், 360க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் பலர் கைதாகியுள்ளனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2018, 15:04