தேடுதல்

தமிழக ஆயர்கள் தமிழக ஆயர்கள் 

மக்களோடு மக்களுக்காக தமிழக திருஅவை

தமிழக-புதுவை அருட்பணிப் பேரவை, தமிழக ஆயர் பேரவை, தமிழக-புதுவை துறவியர் பேரவை கூட்டமைப்பு,மற்றும் தமிழக மறைமாவட்ட குருக்கள் பேரவை ஆண்டுக் கூட்டம்

வத்திக்கான் செய்திகள் தமிழ்ப்பணிக் குழு - அ.பணி.லூ.சகாயராசு,

தமிழக ஆயர் பேரவை ஆண்டுக் கூட்டம்

2018-19 ஆம் ஆண்டுக்கான தமிழக ஆயர் பேரவை ஆண்டுக்கூட்டம் கும்பகோணம் மறைமாவட்டம் பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவின் திருத்தலத்தில் உள்ள தியான இல்லத்தில் ஜூலை திங்கள் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி, தியான இல்ல இயக்குநர் மற்றும் திருத்தல அதிபர் மற்றும் அருட்தந்தையர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

ஜூலை 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணிக்கு தமிழ்நாடு- பாண்டிச்சேரி அருட்பணிப் பேரவை, தமிழக ஆயர் பேரவை, தமிழக மறைமாவட்ட குருக்கள்  பேரவை மற்றும் தமிழக துறவியர் சங்க ஆண்டுக் கூட்டம், தமிழக ஆயர் பேரவையின் தலைவர் மேதகு பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மறைமாவட்ட ஆயர்களும், ஆயர் பேரவையின் பல்வேறு பணிக்குழுச் செயலர்களும், மறைமாவட்ட அருட்பணிப் பேரவையின் செயலர்களும், அனைத்து மறைமாவட்ட அருட்பணிப் பேரவை உறுப்பினர்களும், மற்றும் அனைத்து மறைமாவட்டங்களின் அருட்பணி மையங்களின் இயக்குநர்களும் சேர்ந்து ஏறக்குறைய 215 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ்நாடு- பாண்டிச்சேரி அருட்பணிப் பேரவையின் துணைத்தலைவர் அருட்பணி மரிய வியான்னி விழாவில் பங்கேற்க வந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றார். தமிழக ஆயர் பேரவையின் துணைச்செயலர் பணி.லூ.சகாயராசு அவர்கள் கடந்த ஆண்டுக் கூட்டத்தின் அறிக்கையை வாசித்தார். கூடுதலாக, அனைத்து மறைமாவட்டங்களும் எவ்வாறு கடந்த ஆண்டு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைச் செயல்படுத்தின என்பதற்கான தொகுப்பு அறிக்கையை வாசித்தளித்தார். இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி மற்றும் கிறித்தவர்களுக்குத் தேவையான அரசியல் விழிப்புணர்வு, உரிமை பாதுகாப்பு குழு சட்ட ஆலோசனை குழு அமைத்தல், Dalit Empowerment policyயை நடைமுறைப்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் எப்படி செயல்படுததப்பட்டன என்பது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. இச்செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற மறைமாவட்டங்கள் மேற்கொண்டுள்ள திட்டங்களும் அறிக்கையில் விளக்கப்பட்டன.

பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்களின் உரை

தமிழக ஆயர் பேரவையின் தலைவர் மேதகு பேராயர் அந்தோணி பாப்புசாமி தமது தொடக்க உரையில், “தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளில் தமிழக திருஅவையின் பங்கேற்பும் சவால்களும் - நம்பிக்கையின் ஒளியில் ஒன்றுபடுதல்” பற்றிய தமது சிந்தனைகளைப் பகிர்நது கொண்டார். இயற்கை வளச் சுரண்டல், கூடங்குளம், மீத்தேன், மீனவர் படுகொலைகள், துறைமுகம், காவேரி மேலாண்மை வாரியம், சாதி ஆணவக் கொலைகள், தாதுமணல், ஆற்று மணல், கிரானைட், டாஸ்மார்க் எதிர்ப்பு, நியூட்ரினோ, விவசாயிகள் தற்கொலை, கதிராமங்கலம், நெடுவாசல், இந்தி எதிர்ப்பு, நீட் தேர்வு, ஸ்டெர்லைட், முல்லைப்பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு, தாமிரபரணி, அத்திக்கடவு – அவினாசி, வேடியப்பன் மலை, பண மதிப்பிழப்பு, ஜீ.எஸ்.டி., மாட்டுக்கறி, கீழடி, செம்மொழி நிறுவனம், தூத்துக்குடி துப்பாக்கி சுடு, சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம்; போன்றவற்றால் தமிழக மக்கள் படும் துன்பங்களை எடுத்துரைத்தார். “அப்போது ஆண்டவர் கூறியது : எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்;: அடிமை வேலை வாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்” (வி.பய 3 : 7-8) என்னும் விவிலிய மேற்கோளைக் காட்டி  தமிழக திருஅவை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் இருந்தும் அவர்களது போராட்டங்களில் இருந்தும் விலகி நிற்க முடியாது எனக் குறிப்பிட்டார். மேலும் தமிழக திருஅவை மக்களை வழிநடத்திச் செல்லும் மாபெரும் கடமை பெற்றிருக்கிறது என அர்த்தமுள்ள முன்னுரையைக் கொடுத்தார். தொடர்ந்து பேராசிரியரும் சமூக ஆர்வலருமான திரு. பெர்நார்டு சாமி அவர்களை கருத்துரை வழங்க அழைப்பு விடுத்தார்.

சமூக ஆர்வலர் திரு. பெர்நார்டு சாமி அவர்களின் கருத்துரை

திரு.பெர்நார்டு சாமி அவர்கள் தமது கருத்துரையில் துன்பப்படும் மக்களின் புள்ளி விபரங்களைப் பட்டியலிட்டு தமிழக திரு அவை இத்தகைய புள்ளி விபரங்களைத் திரட்டி பல்வேறு காரணங்களுக்காய் துன்பப்படும் மக்களை இனம் கண்டு அவர்களின் வாழ்வாதாரத்துக்காய் உழைத்திட முன் வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். குறிப்பாக, இயற்கை சீற்றம் மற்றும் போரினாலும், வன்முறையினாலும், வறுமையினாலும் புலம் பெயரும் மக்களுக்காகவும் மற்றும் வெளிநாடுகளில் கணவர் பணியாற்;ற குழந்தைகளையும் குடும்பத்தையும் பேணிக்காக்க பாடுபடும் பெண்களின் நலனுக்காகவும், முதியோருக்காவும்  புதிய பணிக்குழுக்களை உருவாக்கி அவர்களுக்காய் உழைத்திட முன்வர வேண்டும் என அறிவுறுத்தினார். உண்மைக்கு முதலிடம் கொடுக்கும் சமூகமாக நம்முடைய சமூகம் இல்லை என்பதையும் சுட்டிகாட்டினார். தமிழக திருஅவை சில நேரங்களில் சமூகப் பிரச்சனைகளிலிருந்து விலகி நிற்பதைக் காண முடிகிறது எனப் பதிவு செய்தவர் இறை மக்களுக்குப் போதிய சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வு தர தமிழக திருஅவை முன் வர வேண்டும் அதற்காக சிந்தனையாளர் குழுவை ((Think-Tank) உருவாக்கி அவர்கள் முலம் மக்களுக்கு விழிப்புணர்வு தரலாம் எனப் பரிந்துரைத்தார். தமிழகத்தில் மத ரீதியாக பிற சிறுபான்மையினரை விட அதிக எண்ணிக்கையில் கிறித்தவர்கள் இருந்தாலும் அரசியலில் கிறித்தவர்கள் போதிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையை எண்ணிப் பார்த்து அதனைச் சரி செய்ய திருஅவை முன் வர வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்தார்.

குழுக்களில் கலந்துரையாடல், அறிக்கைகள்

தேனீர் இடைவேளைக்குப் பிறகு, கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் ஏழு குழுக்களாகப் பிரிந்து, பின்வரும் ஏழு கேள்விகளைத் தத்தம் குழுக்களில் கூடி விவாதித்தனர்:

•             கிறித்தவர்களுக்கும் அரசியலுக்கும் இருக்கக் கூடிய இடைவெளிகளை இனம் காணுக. அவற்றை எவ்வாறு வரும் நாட்களில் எதிர் கொள்ளலாம்?

•             சமூகப்பிரச்சனைகளுக்கு கிறித்தவர்கள் ஏன் தாமதித்த பதிலிருப்பை தருகின்றனர்? இந்தப் பிரச்சனைகளை வரும் நாட்களில் எவ்வாறு எதிர் கொள்ள முடியும்;?

•             புலம் பெயர்தல் பற்றி உங்களிடம் புரிதல் இருக்கின்றதா? வெளி மாநிலங்களிலிருந்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு திருஅவை எந்த குறிக்கீடுகள் செய்ய முடியும்?

•             பெண்கள் முன்னேற்ற அடிப்படையில் தமிழகம் பின் தங்கி இருக்கின்றது. எவ்வாறு இந்த நிலையை திருஅவை மாற்ற முடியும்? (தமிழகத்திலும் திருஅவையிலும்)

•             உயர்கல்வியில் மிக அதிகமானோர் செல்லாததற்கு என்ன காரணம்? திருஅவை இந்த சதவீதம் உயர்வதற்கு என்ன முயற்சிகள் எடுக்கலாம்?

•             இளைஞர்கள் சமுதாயத்திலிருந்தும் திருஅவையிலிருந்தும் வெளியேறி கொண்டிருக்கின்றனர். அவர்களை எவ்வாறு சமூக அக்கறையுள்ள அரசியல் ஈடுபாட்டுடன் வளர்த்தெடுக்க முடியும்? உங்களுடைய பரிந்துரைகளை குறிப்பிடவும்.

•             பெண்கள் முன்னெடுக்கும் குடும்பங்களை எவ்வாறு சமுதாயமும் திருஅவையும் பாதுகாக்க முடியும்?

மதிய உணவுக்குப் பின் 2.00 மணிக்கு கூடிய கூட்டத்தில் 7 குழுக்களின் பிரதிநிதிகள் தங்கள் குழுக்களில் விவாதித்த பரிந்துரைக் கருத்துக்களை அனைவரிடமும் பகிர்ந்து அறிக்கை சமர்ப்பித்தனர். பொது கலந்துரையாடலுக்குப் பின் தமிழ்நாடு - பாண்டிச்சேரி அருட்பணிப் பேரவை பரிந்துரைத்த தீர்மானங்களை தமிழக ஆயர் பேரவை பரிசீலித்து கீழ்கண்ட தீர்மான முடிவு எடுக்கப்பட்டு ஒவ்வொரு மறைமாவட்டமும் நடப்பு ஆண்டில் அதனைச் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது: “காலம் மற்றும் சுழலுக்கு ஏற்ப பாதிக்கப்படும் கிறித்தவர்களை இனம் கண்டு அவர்களுடைய துன்பங்களில் உதவிட புதிய பணிக் குழுக்களை, உதாரணமாக, புலம் பெயர்ந்தோர் பணிக்குழு, முதியோர் பணிக் குழு, பாதிக்கப்படும் மக்களைக் கணக்கெடுக்கும் பணிக்குழு போன்றவற்றை அமைத்து காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு இறைப்பணி ஆற்ற தமிழக திருஅவை முன் வர வேண்டும்”;. தமிழக ஆயர்கள் தமது தனிக் கூட்டத்தில் இப்பரிந்துரையை விவாதித்து தங்களது மறைமாவட்டங்களில் இதனைச் செயல் படுத்திட முடிவெடுத்தனர்.

சூலை 16ம் தேதியிலிருந்து பிற நிகழ்வுகள்

சூலை 16 ஆம் தேதியிலிருந்து தமிழக ஆயர் பேரவை மற்றும் தமிழக துறவியர் சங்கத்தினர் முன்னிலையில் ஆயர் பேரவையின் பல்வேறு பணிக்குழுக்களின் ஆண்டறிக்கைகளைப் பணிக்குழுக்களின் இயக்குநர்களும், செயலர்களும் பகிர்ந்து கொண்டனர். ஓவ்வொரு பணிக்குழுவின் செயல்பாடுகள் பற்றி ஆயர்களும், செயலர்களும் கருத்துப் பரிமாற்றம், செயல்விளக்கம், மற்றும் பணிக்குழுக்களின் வளர்ச்சிக்கான வழிகாட்டல்களையும் வழங்கினார்கள். பணிக்குழுக்களின் அறிக்கைப் பகிர்வு ஜூலை 17ஆம் தேதி மாலை நிறைவடைந்தது.

சூலை 17ஆம் தேதி காலை 9.00 மணி முதல் 10.45 மணி வரை தமிழக ஆயர் பேரவை மற்றும் தமிழக துறவியர் சங்கத்தினர்; இருபால் துறவியர் மற்றும் மறைமாவட்டங்கள்; இணைந்து இறைப்பணியாற்ற கடந்த நான்கு ஆண்டுகளாக தயாரித்து விவாதித்து வந்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இறுதி பிரதியை பரிசீலித்து விரைவில் ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்திட முடிவெடுத்தனர்.

ஜூலை 18 ஆம் தேதி ஆயர்கள் மட்டும் அடங்கிய கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2018-19-ஆம் ஆண்டுக்கான வழிகாட்டும் திட்டம் தீட்டவும், பணிக்குழுக்களின் சவால்கள்-பிரச்சனைகளைக் களைந்து, சிறப்பாக செயல்பட சில ஆலோசனைகளை வழங்கவும், முடிவுகளை மேற்கொண்டு ஆயர் பேரவையின் ஒவ்வொரு பணிக்குழுவும் தங்களின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தவும் வளர்ச்சிக் காணவும் ஆயர்கள் திட்டங்களையும் பரிந்துரைகளையும் தீட்டினர்.

பணிக்குழுக்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

பணிக்குழுக்களுக்கான புதிய தலைவர்களும் நியமிக்கப்பட்டனர். குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜெரோம் தாஸ் அவர்கள் BC/MBC/DNC பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பணிக்குழுவின் செயலராக திண்டுக்கல் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பணி.சாம்சன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இப்பணிக்குழுவின் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றிய மார்த்தாண்டம் ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோசு அவர்களுக்கும் செயலராகப் பணியாற்றிய கோடடாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த பணி அருள்ராசு அவர்களுக்கும் நன்றி கூறப்பட்டது. திருவழிப்பாட்டுப் பணிக் குழு தலைவராக பாண்டிச்சேரி உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு ஆனந்தராயர் அவர்கள் நியமிக்கப்பட்டார், இதுவரை இப்பணிக்குழுவின் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றிய பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களுக்கு நன்றி கூறப்பட்டது.  மறைக்கல்விப் பணிக்குழு தலைவராக கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி அவர்கள் நியமிக்கப்பட்டார். இதுவரை இப்பணிக்குழுவின் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றிய திருச்சி முன்னாள் ஆயர் மேதகு அந்தோணி டிவோட்டா அவர்களுக்கு நன்றி கூறப்பட்டது.

தமிழக ஆயர் பேரவையின் கூட்டம் ஆண்டவர் இயேசுவின் வழிகாட்டுதலில் பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் இனிதே நிறைவுற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2018, 10:48