"திருத்தந்தை பிரான்சிஸ், தியாக்கோன்கள்: பிறரன்பின் ஊழியர்கள்" நூலின் அட்டைப்படம் "திருத்தந்தை பிரான்சிஸ், தியாக்கோன்கள்: பிறரன்பின் ஊழியர்கள்" நூலின் அட்டைப்படம் 

"திருத்தந்தை பிரான்சிஸ், தியாக்கோன்கள்: பிறரன்பின் ஊழியர்கள்"

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கண்ணோட்டத்தின் அடிப்படையில், "திருத்தந்தை பிரான்சிஸ், தியாக்கோன்கள்: பிறரன்பின் ஊழியர்கள்" என்ற புதிய நூல் வெளியீடு.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,25,2018. "திருத்தந்தை பிரான்சிஸ், தியாக்கோன்கள்: பிறரன்பின் ஊழியர்கள்" என்ற தலைப்பில், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை புதிய நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிரந்தர தியாக்கோன் என்ற நிலையில் இருப்போருக்கும், திருஅவைக்கும் உள்ள உறவைக் குறித்து, ஒரு தியாக்கோனின் கண்ணோட்டத்திலிருந்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனஸ் அயிரஸ் பேராயராகப் பணியாற்றிய வேளையில் வெளியிட்ட கருத்துக்களையும், அவர் திருத்தந்தையான பின்னர் எழுதிய 'நற்செய்தியின் மகிழ்வு' என்ற திருத்தூது அறிவுரை மடலில் கூறியுள்ள கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு, நிரந்தர தியாக்கோன் என்ற நிலையை  விவரிக்கும் கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

கிறிஸ்துவுக்கும், மறைமாவட்ட ஆயருக்கும், தங்கள் பகுதியில் வாழும் வறியோருக்கும் உதவிகள் செய்வதன் வழியே, கிறிஸ்துவின் மறையுடலுக்கு, நிரந்தர தியாக்கோன்கள் ஆற்றிவரும் பணிகள் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் உயர்ந்த கண்ணோட்டத்தை இந்நூல் வெளிக்கொணர்கிறது.

இல்லங்களுக்கு நற்செய்தியை எடுத்துச்செல்லும் பணியாளர்களாக, கிறிஸ்தவப் பிறரன்புக்கு எடுத்துக்காட்டுகளாக வாழும் நிரந்தர தியாக்கோன்கள் குறித்த ஓர் அழகிய நூல் இது என்று அமெரிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவையில் ஏறத்தாழ 16,000த்திற்கும் அதிகமான நிரந்தர தியாக்கோன்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. (USCCB)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2018, 15:33