சரயேவோ கோவிலில் திருப்பலி சரயேவோ கோவிலில் திருப்பலி 

புதியதொரு துவக்கத்திற்கு தேர்தல்கள் வழிவகுக்கட்டும்

புதுப்பித்தல், மற்றவரை மதித்தல், அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமை, அனைத்து கலச்சாரங்களும், மொழிகளும், மதிக்கப்படுவதை உறுதிச் செய்தல் போன்றவற்றை உருவாக்கும் சூழலுக்கு, தேர்தல் வழியாக பாதை காட்டுவோம் என்று பால்கன் பகுதி ஆயர்கள் கூறுகின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள் 

போஸ்னியா-ஹெர்சகொவினா (Bosnia-Herzegovina) நாட்டு மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை செயல்படுத்தும் நோக்கத்தில் தங்கள் பெயர்களை பதிவுச் செய்ய வேண்டும், ஏனெனில் வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

இம்மாதம் 14ம் தேதி Banja Luka நகரில் தங்கள் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை முடித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆயர்கள், இவ்வாண்டு அக்டோபர் 7ம் தேதி, போஸ்னியா ஹெர்சகொவினாவில் இடம்பெற உள்ள தேர்தலில் வாக்களிக்க வேண்டிய மக்களின் கடமையை அதில் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தல் என்பது ஒரு புது துவக்கத்தைக் குறிப்பது என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், கருத்துப் பரிமாற்றங்கள், மக்களிடையே வேறுபட்ட கலாச்சாரங்களையும், மொழிகளையும், மதங்களையும் மதித்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு சூழலை உருவாக்கும் நோக்கத்தில் தேர்தல் பங்களிப்பு இருக்கவேண்டும் எனவும் அதில் விண்ணப்பித்துள்ளனர்.

மற்றவர் அல்லது மற்ற இனத்தவரின் துன்பங்களிலிருந்து ஒருவரின் மகிழ்ச்சியை கட்டியெழுப்ப முடியாது என்ற அடிப்படை உண்மையை மனதில் கொண்டவர்களாக, நாட்டில் வாழும் அனைத்து இனத்தவரின் பங்களிப்பும் தேர்தலில் இருக்க வேண்டும் என்பது உறுதிச் செய்யப்பட வேண்டும் எனவும், ஆயர்கள், தங்கள் அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2018, 16:00