நூறு நாள்களாக நிக்கராகுவாவில்  தொடரும் பதட்டநிலை நூறு நாள்களாக நிக்கராகுவாவில் தொடரும் பதட்டநிலை 

நிக்கராகுவா ஆயர்கள் அரசுத்தலைவருக்கு கடிதம் எழுத...

நிக்கராகுவாவில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் கலந்துரையாடலில் ஆயர்கள் தொடர்ந்து இடைநிலை வகிக்க அரசுத்தலைவருக்கு விருப்பமா?

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நிக்கராகுவாவின் தேசிய கலந்துரையாடல் குழுவில், ஆயர்கள் இடைநிலை வகிப்பது தொடரப்பட வேண்டுமென அரசுத்தலைவர் டானியேல் ஒர்தேகா அவர்கள் விரும்பினால், அதை எழுத்துவடிவில் தரவேண்டுமென, அரசுத்தலைவரிடம் கேட்பதற்கு ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் ஏறக்குறைய நூறு நாள்களாகத் தொடர்ந்து இடம்பெறும் போராட்டங்கள் மற்றும், வன்முறைகளையொட்டி இதற்குத் தீர்வு காண்பதற்கென, இவ்வாரத்தில் இரண்டாவது முறையாக, ஜூலை 26, இவ்வியாழனன்று கூட்டம் நடத்தியுள்ள ஆயர்கள், இவ்வாறு தீர்மானித்துள்ளனர்.

தங்களின் இத்தீர்மானத்தை, கடிதம் வழியாக அரசுத்தலைவருக்கு விரைவில் அனுப்புவதற்குத் திட்டமிட்டுள்ள ஆயர்கள், அரசுத்தலைவரின் பதிலை வைத்து தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும் எனவும், ஜூலை 30, வருகிற திங்களன்று, தாங்கள் மீண்டும் கூட்டம் நடத்தவிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, நிக்கராகுவா பிரச்சனையையொட்டி உள்நாட்டிலும், பன்னாட்டு அளவிலும் பதட்டநிலைகள் தொடர்ந்து அதிகரித்துவரும்வேளை, இப்பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து மறைந்திருந்த மாணவர்கள், தற்போது தெருக்களில் வந்து போராடத் தொடங்கியுள்ளனர் என பீதேஸ் செய்தி கூறுகின்றது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2018, 16:14