டப்ளின் பேராயர் Diarmuid Martin டப்ளின் பேராயர் Diarmuid Martin  

டப்ளின் குடும்பங்கள் விழா நிகழ்வுகள்

மாறியுள்ள கலாச்சாரத்தைப் பற்றிப்பிடித்துள்ள அயர்லாந்து திருஅவைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உதவுவார் என, டப்ளின் பேராயர் கூறுகிறார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதாபிமானம் மற்றும் மனிதம் நிறை அன்புக்கு, சிறப்பாக அழைப்பு விடுப்பார் என்று, டப்ளின் பேராயர் Diarmuid Martin அவர்கள், வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி, டப்ளின் நகரின் Croke பூங்காவில் நடைபெறவுள்ள குடும்பங்கள் விழா பற்றிய செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில், வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கும் 9வது உலக குடும்பங்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக இடம்பெறும், குடும்பங்கள் விழா பற்றி விளக்கிய பேராயர் Martin அவர்கள், இதயங்களைக் கவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உண்மையான திறமைகள் பற்றியும் தெரிவித்தார்.

1979ம் ஆண்டு செப்டம்பரில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் அயர்லாந்துக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டதற்குப் பின்னர், நாட்டில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்றுரைத்த பேராயர் Martin அவர்கள், இப்போதைய அயர்லாந்து திருஅவை செல்ல வேண்டிய பாதையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காட்டுவார் என்று கூறினார்.

இவ்விழாவில் 116 நாடுகளிலிருந்து குடும்பங்கள் கலந்துகொள்ளும் எனவும், அயர்லாந்து, கானடா, இந்தியா, ஈராக், ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்கள் திருத்தந்தையின் முன்னிலையில் சான்று பகரும் எனவும் பேராயர் தெரிவித்தார்.

குடும்பத்தில் மன்னிப்பு, குடும்பத்தில் சக்தி, குடும்ப வாழ்வில் நம்பிக்கை, இன்றையக் குடும்பங்களின் தலைமுறைகளின் இயல்பு, குடும்ப வாழ்வில் தொழில்நுட்பத்தின் தாக்கம் ஆகிய தலைப்புகளில், குடும்பங்கள் சாட்சியங்கள் வழங்கும் எனவும், டப்ளின் பேராயர் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2018, 16:03