Vatican News
சிலுவைகளின் எண்ணிக்கை பெருகியது, கிறிஸ்தவமும் வளர்ந்தது சிலுவைகளின் எண்ணிக்கை பெருகியது, கிறிஸ்தவமும் வளர்ந்தது  (AFP or licensors)

சாம்பலில் பூத்த சரித்திரம் : பிராங்க் இனத்தவரின் மனமாற்றம்

அரசர் குளோவிஸ், இயேசு கிறிஸ்துவை நோக்கி அழுது செபித்தார். போரில் வெற்றியும் கிடைத்தது. ஆக்ரமிப்பு நடத்தியிருந்த அலெமானியர்களைத் தோற்கடித்தார். இயேசுவும் அரசருக்கு ஆதரவாக இருந்தார். அரசர் குளோவிஸ் தொடர்ந்து சண்டையிட்டு தனது எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே சென்றார்.

மேரி திரேசா - வத்திக்கான் செய்திகள்

பிராங்க்ஸ் (Franks) எனப்படுபவர்கள், மூன்றாம் நூற்றாண்டில், ரைன் (Rhine) நதிப் பகுதியில், உரோமைப் பேரரசின் எல்லைப் பகுதியில் வாழ்ந்த ஒரு ஜெர்மானிய பழங்குடி இனத்தவர் ஆவர். பின்னாளில் வீழ்ச்சியடைந்த உரோமைப் பேரரசின் பல பகுதிகளையும், ஜெர்மானியர்களையும் ஆட்சி செய்த இந்த இனத்தவர், மேற்கு உரோமைப் பேரரசின் பழைய ஆட்சியாளர்களைத் தொடர்ந்து, ஆட்சி செய்தவர்கள் என, கத்தோலிக்கத் திருஅவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். ஜெர்மானியர்களான பிராங்க் இனத்தவர், 400களின் இறுதிக் கட்டத்தில் ஆங்கில கால்வாய்க்கு அருகிலுள்ள Gaul பகுதியை ஆக்ரமித்தனர். கோத்ஸ் (Visigoth) எனப்படும் ஜெர்மானிய நாடோடி இனத்தவர், ஜெர்மனியின் கிழக்கில் (தற்போதைய போலந்து பகுதி) வாழ்ந்த பர்கன்டி (Burgundy) காட்டுமிராண்டி பழங்குடி இனத்தவர் ஆகியோர் போன்று, பிராங்க் பழங்குடி இனத்தவர், உரோமைப் பேரரசில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த இனத்தவர், தங்களின் கடந்தகால தலைவர்கள் பற்றி பெருமையாகப் பாடி வந்தனர். பல கடவுள்களையும் வழிபட்டு வந்தனர். இந்த இனத்தவரை ஆட்சிசெய்தவர்கள், கடவுள்களிடமிருந்து வந்த அரச பரம்பரையினர் எனவும், அந்த இன மக்கள் நம்பினர். இவர்களின் அரசர் 481ம் ஆண்டில் காலமானார். அவருக்குப்பின் அவரின் 15 வயது நிரம்பிய மகன் குளோவிஸ் (Clovis) ஆட்சிக்கு வந்தார். குளோவிசுக்கு இருபது வயது நிரம்பியவேளையில், தனக்கு கடவுள்களின் உதவி இருக்கின்றது என்ற நம்பிக்கையில், ஏனைய இனங்களுக்கு எதிராக, தனது படையை தெற்கு மற்றும் மேற்கு நோக்கி நடத்திச் சென்றார். போரில் வெற்றியும் பெற்ற குளோவிஸ், தனது ஆட்சிப் பகுதியை, சென் (Seine) நதி வரை, தற்போதைய பாரிஸ் நகருக்கு அருகில்வரை விரிவாக்கினார். அதைத்தொடர்ந்து பல போர்களைத் தொடுத்தார். பலரைக் கொன்றார். கத்தோலிக்க ஆலயங்கள் உட்பட, எங்கெங்கு நுழைய முடியுமோ அங்கெல்லாம் ஊருவி, தனது அரசு எல்லையை விரிவு படுத்தினார்.

பிராங்க் இன அரசர் குளோவிசின் வெற்றியைக் கண்டு, அந்த அரசுக்கு அருகில் வாழ்ந்த ஏனைய அரசுகள் அச்சமுற்றன. குளோவிஸ், பர்கன்டி இன அரசரிடம் தனது அரச பிரதிநிதி ஒருவரை அனுப்பி, மிகச் சிறந்த அழகும், கவர்ச்சியும் கொண்ட அவரது பேத்தி குளோட்டில்டாவை (Clotilda) தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டார். அதற்கு மறுப்பு சொல்வதற்கு, பர்கன்டி அரசர் அச்சமுற்றார். குளோட்டில்டா, மூவொரு கடவுளில் நம்பிக்கை வைத்திருந்தவர் மற்றும், உரோமன் கத்தோலிக்கர். இத்திருமணம் நடந்து நூறு ஆண்டுகள் சென்று, கத்தோலிக்க வரலாற்று ஆசிரியரான தூர் நகர் கிரகரி அவர்கள் எழுதியுள்ள குறிப்புகளில் இவ்வாறு அறிகிறோம். பிராங் இனத்தவர், இன்றைய ஜெர்மனியின் போன் நகருக்கு அருகில், அலெமானி இன ஜெர்மானியர்களுக்கு எதிராக, பெரிய போர் ஒன்றை நடத்தினார்கள். அதில் குளோவிசின் படைகள் துன்பங்களை எதிர்கொண்டன. குளோவிஸ் தனது கடவுள்களை உதவிக்கு அழைத்தார். எந்த உதவியும் வந்ததாகத் தெரியவில்லை. பின்னர் குளோவிஸ் வானகம் நோக்கி தன் கைகளை உயர்த்தி, கண்ணீரோடு, இயேசு கிறிஸ்துவே, குளோட்டில்டா  உம்மை உயிருள்ள வாழும் கடவுள் என அறிவிக்கிறாள். தேவையில் இருப்போருக்கு நீர் உதவுவதாகவும் உம்மில் நம்பிக்கை வைப்போருக்கு மாபெரும் வெற்றியைத் தருவதாகவும் சொல்லியுள்ளீராம். நீர் எனக்கு இந்தப் போரில் உதவி செய்தால், நான் உமது பெயரில் திருமுழுக்குப் பெறுவேன்

இவ்வாறு அரசர் குளோவிஸ், இயேசு கிறிஸ்துவை நோக்கி அழுது செபித்தார். போரில் வெற்றியும் கிடைத்தது. ஆக்ரமிப்பு நடத்தியிருந்த அலெமானியர்களைத் தோற்கடித்தார். இயேசுவும் அரசருக்கு ஆதரவாக இருந்தார். அரசர் குளோவிஸ் தொடர்ந்து சண்டையிட்டு தனது எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே சென்றார். தெற்கே சுவிட்சர்லாந்துவரை, அதாவது, ரைன் நதிக்கரையிலுள்ள இன்றைய பாசில் (Basel) நகர் வரை அவரது அரசு விரிவடைந்தது. மேற்கு ஐரோப்பாவில் ஜெர்மானிய அரசர்களில் மூத்தவரான இத்தாலிய அரசர் தெயோதோரிக் என்பவர், குளோவிஸ் இத்தாலி வரை வருவதை எச்சரித்தார். ஏனெனில் அரசர் தெயோதோரிக், ஏனைய ஜெர்மானிய அரசுகளுக்கும் பாதுகாவலராக இருந்தார். அதேநேரம், கிறிஸ்தவ நற்செய்தி அறிவிப்பாளர்கள், அரசர் குளோவிஸ் சார்ந்த பிராங்க் இனத்தவர் மத்தியில் மதமாற்றம் நடைபெறுவதைக் கண்டனர். உரோமைக் கலாச்சாரத்தோடு தொடர்புகொண்டிருந்த கிறிஸ்தவத்தால் பிராங்க் இனத்தவர் ஈர்க்கப்பட்டனர். கிறிஸ்தவர்களைப் போன்று அந்த மக்களுக்கு இறையியல் தெரியாது. ஆனால் அரசர் குளோவிஸ் அடைந்த வெற்றி, இயேசுவே வழங்கியது என அம்மக்கள் உணரத் தொடங்கினர். ஆனால் அரசர் குளோவிஸ் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆதலால் குளோவிசின் குடும்பம், மதத்தில் பிளவுபட்டிருந்தது.

குளோவிசின் மனைவியான அரசி குளோட்டில்டாவின் மாமாவான, பர்குன்டியின் புதிய அரசர் ஆரியனிச கிறிஸ்தவத்தைப் பின்பற்றினார். குளோவிசின் சகோதரிகளில் ஒருவரும், ஆரியனிச கிறிஸ்தவத்தைப் பின்பற்றி, அதே நெறியைப் பின்பற்றிய அரசர் தெயோதோரிசை மணந்தார். குளோவிசின் இரண்டாவது சகோதரியும், ஆரியனிச கிறிஸ்தவத்தைப் பின்பற்றினார். குளோவிசின் மூன்றாவது சகோதரி கிறிஸ்தவத்தைப் பின்பற்றவில்லை. இந்நிலையில், குளோவிஸ் தனக்கு நெருக்கமான மாவீரர்களிடம் ஆலோசனை கேட்டார். பின்னர், போன் நகருக்கு அருகில் இவர் வெற்றியடைந்த இரு ஆண்டுகளுக்கு மேல், ஒரு கிறிஸ்மஸ் நாளன்று, அரசர் குலோவிசும், அவரின் பல மாவீரர்களும் திருமுழுக்குப் பெற்று கத்தோலிக்கரானார்கள். இந்நிகழ்வு, மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்றது. குளோவிஸ், தனது அரசை, ஏறத்தாழ Gaul பகுதி முழுவதும் விரிவுபடுத்தினார். கத்தோலிக்கம், குளோவிசுக்கு, சில சலுகைகளை அளித்தது. மேற்கு ஐரோப்பாவில் வல்லமையுடன் ஆட்சி செய்த சிலரை இவர் வென்றார். அச்சமயத்தில், ஜெர்மானிய கடவுள்கள் வழிபாட்டிலிருந்து,  ஆரியனிச கிறிஸ்தவத்தைப் பின்பற்றிய கோத் மற்றம் ஏனைய இனங்களிலிருந்து குளோவிஸ் மாறுபட்டிருந்தார். இவர், விசிகோத் இனத்தவரை வெல்வதற்கும் உரோமன் அரச குடும்பத்தினர் உதவி செய்தனர். இதனால், 507ம் ஆண்டில், Gaulன் தென்பகுதியிலிருந்து விசிகோத் இனத்தவர் வெளியேறினர் மற்றும், பிராங் இனத்தவர், மிகப்பெரும் அளவில் கத்தோலிக்கத்தைத் தழுவினர்.

அரசர் குளோவிஸ் இறப்பதற்கு சிறிது காலத்திற்குமுன், Orleansல் Gaul ஆயர்கள் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். திருஅவையில் சீர்திருத்தம் கொண்டுவரவும், கத்தோலிக்க ஆயர்களுக்கும், அரசருக்கும் இடையே வலுவான உறவை உருவாக்கவுமென, இப்பொதுச்சங்கத்தை கூட்டினார் அரசர் குளோவிஸ். இதுவே, முதல் Orleans பொதுச்சங்கமாகும். இதில் 33 ஆயர்கள் கலந்துகொண்டனர். தனிநபரின் கடமைகள், வழிபாட்டுத் தலங்களின் உரிமை, திருஅவையின் ஒழுங்குமுறை ஆகியவை பற்றிய 31 விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. இந்த விதிமுறைகள், பிராங் இனத்தவர் மற்றும் உரோமையர்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டியவைகளாக அமைக்கப்பட்டன. அரசர் குளோவிஸ் 511ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி காலமானார் எனச் சொல்லப்படுகின்றது. இவர் 513ம் ஆண்டுவரை உயிரோடு இருந்தார் எனவும் சொல்லபடுகின்றது. இவர் முதலாம் குளோவிஸ் என அழைக்கப்படுகிறார். இவர் மற்றும் அரசி குளோட்டில்டாவின் கல்லறை, பாரிஸ் நகரில் புனித ஜெனெவீவ் துறவு இல்லத்தில் உள்ளன. பிராங் என்ற பெயரிலிருந்தே பிரான்ஸ் என்ற பெயர் வந்தது என ஏடுகள் கூறுகின்றன. அரசர் முதலாம் குளோவிஸ் அவர்கள், மனம்மாறி கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்றது குறித்த அவரின் வரலாறை, கத்தோலிக்க வரலாற்று ஆசிரியர், தூர் நகர் கிரகரி அவர்கள் எழுதியுள்ள குறிப்புகளில் வாசிக்கிறோம்.  

அரசர் குலோவிஸ் கத்தோலிக்கத்தை தழுவிய சமயத்தில், கிரீஸ், ஆசியா மைனர், சிரியா, பாலஸ்தீனம், எகிப்து ஆகிய பகுதிகளில், பேரரசர்கள் கான்ஸ்தாந்திநோபிளில் அதிகாரம் கொண்டிருந்தனர். அப்பகுதிகள் வர்த்தகத்தால் இணைக்கப்பட்டு, கான்ஸ்தாந்திநோபிளின்கீழ் இயங்கின. அகுஸ்துஸ் சீசர் காலத்திலிருந்தே, தாங்களே சரியான அரச வாரிசுகள் என, கான்ஸ்தாந்திநோபிளில் பேரரசர்கள் தங்களை நோக்கினார்கள். தாங்களே உரோமைப் பேரரசை ஆள்வதற்கு சட்டமுறைப்படி உரிமையுடையவர்கள் எனவும் கருதினார்கள். மேற்கு உரோமைப் பேரரசின் பாதிப்பகுதி சிதறிய பின்னரும், கிழக்கு உரோமைப் பேரரசின் தலைநகராகிய கான்ஸ்தாந்திநோபிள், Gaul, இபேரியன் தீபகற்பம், இந்தியா, சீனா ஆகிய இடங்களுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது. கான்ஸ்தாந்திநோபிள், வளமையான நகரமாக, உரோமையர்கள், கிரேக்கர்கள், அர்மேனியர்கள், சிரியா நாட்டினர், அராபியர்கள், ஆசியர்கள், சில ஜெர்மானியர்கள் போன்றவர்களால் நிறைந்து, எல்லாரும் உரோமைக் குடியுரிமை கொண்டு கிறிஸ்துவிலும், மூவொரு இறைவனிலும் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தனர். பல இனத்தவரிடையே திருமணம் புரிவதும் பரவலாக இருந்தது. 500ம் ஆண்டுகளில், கான்ஸ்தாந்திநோபிளில் வாழ்ந்த மக்களில் பலர் கிரேக்க மொழி பேசினர். சிலரே இலத்தீன் பேசினர். சில அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் மட்டுமே இலத்தீன் மொழி பேசப்பட்டு வந்ததால், அம்மொழி மங்கத் தொடங்கியது. கிரேக்கம் பேசத் தெரியாதவர்கள் அல்லது கத்தோலிக்கரல்லாதவர்க்கு எதிராக முற்சார்பு எண்ணங்கள் எழுந்தன. ஏனெனில் கலாச்சாரத்திற்கு இவை அவசியம் என சிலர் அந்நகரில் கருதினர். கான்ஸ்தாந்திநோபிள் இராணுவத்தில் பெரும்பாலானோர் ஜெர்மானியர்கள். போர் வீரர்கள் சிலர் Hun இனத்தவர். ஏராளமான ஜெர்மானியர்கள் நகருக்கு வெளியே நிலங்களில் வேலை செய்தனர். சிலர், நகரில் சாதாரண சில்லறை வேலைகளைச் செய்தனர் மற்றும் சிலர் செல்வர்களின் வீடுகளில் அடிமைகளாக வேலை செய்தனர். கிறிஸ்தவ நகரமான கான்ஸ்தாந்திநோபிளிலில், பல ஆலயங்களும் துறவு ஆதீனங்களும், பெண் துறவு இல்லங்களும் இருந்தன. நோயுற்றோருக்கு மருத்துவமனைகளில் துறவிகளும், அருள்சகோதரிகளும் இலவச சிகிச்சை அளித்தனர். தேவையில் இருப்போருக்கும், வயதானவர்களுக்கும் உதவி செய்யும் இல்லங்களையும் இத்துறவிகள் நடத்தினர். வீடற்றவர்கள் இலவசமாக தங்குவதற்கு உதவினர். கருணை இல்லங்களையும் நடத்தினர்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்

18 July 2018, 14:35