புனித பாட்ரிக் புனித பாட்ரிக்  

சாம்பலில் பூத்த சரித்திரம் : அயர்லாந்தின் மனமாற்றம்

அயர்லாந்தில் கிறிஸ்தவம் பரவ முதலில் காரணமானவர் புனித பாட்ரிக் என்ற நம்பிக்கை பொதுவாக நிலவுகின்றது. ஆனால், அவருக்கு முன்னரே, அந்நாட்டுக்கு முதல் கிறிஸ்தவ மறைபோதகர்கள் சென்றுள்ளனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

உலகிலுள்ள கத்தோலிக்க நாடுகளில் அயர்லாந்து குடியரசும் ஒன்று. ஐரோப்பிய கண்டத்தில் வடமேற்கே அமைந்துள்ள, அயர்லாந்து, அரசியல் அமைப்பின்படி, அயர்லாந்து குடியரசு என்றும், வட அயர்லாந்தும் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து தீவின் ஆறில் ஐந்து பாகம் அயர்லாந்து குடியரசிலும், எஞ்சிய பாகம் வட அயர்லாந்திலும் அமைந்துள்ளன. இத்தீவின் வடகிழக்கேயுள்ள வட அயர்லாந்து பகுதி, பிரிட்டனின் ஆட்சியின் கீழ் உள்ளது. அயர்லாந்து தீவில் உரோமன் கத்தோலிக்கம், 73 விழுக்காட்டுக்கு அதிகமாகவும், அயர்லாந்து குடியரசில் அது ஏறத்தாழ 87 விழுக்காடாகவும் உள்ளது. இந்த தீவு நாட்டில், தொடக்ககால கிறிஸ்தவத்தின் வரலாறு, கி.பி.400க்கும், 800க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் என பதிவு செய்யப்பட்டுள்ளன. அச்சமயத்தில்தான் முதல் கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் அயர்லாந்துக்குச் சென்றுள்ளனர். இவர்கள், உரோமைப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்த பிரிட்டன் மற்றும் பிரான்சின் கால்(Gaul) பகுதியிலிருந்து சென்றனர் எனச் சொல்லப்படுகின்றது. அயர்லாந்தின் தொடக்ககால கிறிஸ்தவம் பற்றி சரியாகப் பதிவுசெய்யப்படவில்லை என்பதால், அக்கிறிஸ்தவ வரலாறு பற்றி வல்லுனர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

அயர்லாந்தில் கிறிஸ்தவம் பரப்பப்படுவதற்கு முன்னரே, அயர்லாந்து மக்கள், பழங்கால செல்டிக் (Celtic) கலாச்சாரத்தைப் பின்பற்றிய Druid எனப்படுபவர்களின் சூரியக் கடவுள் வழிபாட்டைப் பின்பற்றியிருக்கின்றனர். இந்தோ-ஐரோப்பியர்களாகிய செல்ட் இன மக்களின் வரலாறு, கி.மு.2வது மில்லேனேயத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. Druid என்பவர்கள், செல்டிக் கலாச்சாரத்தில் உயர் நிலையில் இருந்தவர்கள். அவர்கள், சட்டம், மருத்துவம், அரசியல் என அனைத்திலும் சிறந்து கற்றுத்தேர்ந்தவர்களாய் இருந்தனர். உரோமைப் பேரரசர் ஜூலியஸ் சீசர் காலத்திலேயே, இவர்களும் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. இவர்கள் கட்டிய மிக முக்கிய வழிபாட்டு இடங்களில் சில ஐரோப்பாவில் உள்ளன. எடுத்துக்காட்டாக, பழங்கால அயர்லாந்தில், கற்காலத்தில் கட்டப்பட்ட Newgrange கல்லறை உள்ளது. 5,200 ஆண்டுகள் பழமையுடைய Newgrange கல்லறை, பழங்கால அயர்லாந்தின் கிழக்கே, Boyne பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. கற்கால விவசாயிகளால் கட்டப்பட்ட இக்கல்லறை, ஏறக்குறைய ஒரு ஏக்கர் பரப்பளவில், 85 மீட்டர் சுற்றளவையும், 13.5 மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளது. 97 பெரிய கற்களால் சூழப்பட்டு, கலையழகோடு இது அமைக்கப்பட்டுள்ளது. Druid மக்கள், அயர்லாந்து முழுவதும் நினைவுச்சின்னங்களை எழுப்பியுள்ளனர். இவற்றை நோக்கும்போது, சூரியனை வழிபடுவது, இந்த மக்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்துள்ளது எனத் தெரிகிறது.

அயர்லாந்தின் முதல் மறைப்பணியாளர்

சூரியனை வழிபட்டுவந்த இந்த மக்களின் மனதை மாற்றி கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு முதலில் வித்திட்டவர் புனித பாட்ரிக் அவர்களே என்ற நம்பிக்கை பொதுவாக நிலவுகின்றது. ஆனால், அக்காலத்தில் உரோமன் கத்தோலிக்கத் திருஅவையில் முக்கியமான உறுப்பினராக இருந்த புனித பிராஸ்பர் (Prosper) அவர்களால், கி.பி.433ம் ஆண்டில் வெளியிடப்பட்ட விவரங்களில், புனித பேட்ரிக் அவர்கள் அயர்லாந்து செல்வதற்கு முன்னரே, அந்நாட்டுக்கு முதல் கிறிஸ்தவ மறைபோதகர்கள் சென்றனர் என அறிகிறோம். புனித பாட்ரிக், ஏறக்குறைய 432ம் ஆண்டில், அயர்லாந்து சென்றார். ஆனால் அவருக்கு முன்னரே, ஆயர் பாலேடியுஸ் (Palladius) என்ற ஆயர் உரோமையிலிருந்து அயர்லாந்திற்குச் சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் கால் பகுதியில் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த பாலேடியுஸ், 429ம் ஆண்டில் உரோமையில் திருத்தொண்டராகப் பணியாற்றினார். பிரிட்டனில், கிறிஸ்தவக் கோட்பாட்டிற்கு முரணான பெலாஜிய தப்பறைக் கொள்கை பரவி வருவதாகக் கேள்விப்பட்டு, அது பற்றி அறிந்துவர, Auxerre ஆயரான ஜெர்மானுஸ் என்பவரை பிரிட்டனுக்கு அனுப்பும் பணியை, பாலேடியுசிடம் ஒப்படைத்தார் திருத்தந்தை முதலாம் செலஸ்டின். அதேநேரம், திருத்தந்தை முதலாம் செலஸ்டின் அவர்கள், 431ம் ஆண்டில் பாலேடியுசை ஆயராகத் திருநிலைப்படுத்தி, கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டிருந்த ஸ்காட் இன மக்களிடம் அனுப்பினார். கடல்பயணம் மேற்கொண்ட ஆயர் பாலேடியுஸ் அவர்கள், அயர்லாந்திலுள்ள, Hy-Garchon அதாவது இன்றைய Wicklow என்ற இடத்தில் சென்றிறங்கினார். ஆனால் அவ்விடத்தில் இவர் நீண்ட காலம் தங்கிப் பணியாற்ற முடியவில்லை. ஏனெனில் Hy-Garchonல் வாழ்ந்தவர்கள், இவரைத் தங்கள் இடத்திலிருந்து விரட்டிவிட்டனர். எனவே பாலேடியுஸ் அவர்கள், மீண்டும் கடல்பயணமாக, ஸ்காட்லாந்திலுள்ள Orkney தீவுகளுக்குச்  சென்றார்.  அதற்கு பிறகு அவர் அயர்லாந்து செல்லவே இல்லை. அவருக்குப்பின் அயர்லாந்து சென்றவர் புனித பாட்ரிக். இவரது வாழ்வு விவரங்கள் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை.

அயர்லாந்தில் புனித பாட்ரிக்

தமிழில் புனித பத்திரிசியார் என நாம் அழைக்கும் புனித பாட்ரிக், 5ம் நூற்றாண்டில்,  அயர்லாந்து முழுவதும் மறைப்பணியாற்றி கிறிஸ்தவத்தைப் பரப்பியவர். இப்புனிதர் அந்நாட்டின் பாதுகாவலராகவும், திருத்தூதராகவும் போற்றப்படுகிறார். பிரிட்டனில், ஏறக்குறைய 386ம்  ஆண்டில், உரோமையப் பெற்றோருக்குப் பிறந்தவர். இவரின் தந்தை Calpornius என்பவர், உரோமைய-பிரித்தானிய இராணுவ அதிகாரியாகவும், திருத்தொண்டராகவும் பணியாற்றினார். இவரின் தாய் Conchessa என்பவர், தூர்ஸ் நகர் புனித மார்ட்டின் அவர்களின் நெருங்கிய உறவினர். பாட்ரிக்கின் தாத்தா போந்தியுசும், ஓர் அருள்பணியாளர். பாட்ரிக்கின் குடும்பம், திருஅவைப் பணிகளில் இவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தாலும், பாட்ரிக் மதநம்பிக்கையற்றவராக இருந்தார். இவரின் குழந்தைப்பருவத்தில் கல்விக்கும் அதிகம் முக்கியத்துவம் தரப்படவில்லை. ஆனால் பிற்காலத்தில், இவர் ஆன்மீக வாழ்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார், இன்றும் விளங்கி வருகிறார் என்பதற்கு, இவரின் 16வது வயதில் நிகழ்ந்தவைதான் முக்கிய காரணம். இந்நிகழ்வு அயர்லாந்து வரலாற்றிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. புனித பாட்ரிக், Confessio என்ற தனது வாழ்க்கை வரலாற்றில், “எனக்கு கல்வியறிவு அவ்வளவாக இல்லை என்பதை வெளிப்படுத்த அஞ்சினேன்” என எழுதியுள்ளார்.

புனித பாட்ரிக் அவர்களுக்கு 16 வயது நடந்தபோது, அவரது இல்லத்திலிருந்து அயர்லாந்து கடல்கொள்ளை கும்பல் பிடித்துச் சென்று, அயர்லாந்தின் Dalriada எனுமிடத்தில்  அடிமையாக விற்றது. புனித பாட்ரிக் அவர்கள் எழுதியுள்ள வாழ்க்கை வரலாறுபடி, அடிமையாக வாழ்ந்த ஆறு ஆண்டுகளும், வட அயர்லாந்தில், Slemish என்ற மலைப்பகுதியில் ஆடுகளையும், பன்றிகளையும் மேய்த்தார் அவர். பாட்ரிக்கின் முதலாளி Milchu என்பவர், Druid சமய வழிபாட்டின் உயர்குரு. இம்மதம், அக்காலத்தில் அயர்லாந்து முழுவதும் பெருமளவில் தாக்கத்தைக் கொண்டிருந்தார். பாட்ரிக் அவர்கள், இந்த ஆறு ஆண்டுகால அடிமை வாழ்வை தனது விசுவாசத்தைச் சோதிப்பதற்காக இறைவன் கொடுத்த ஒரு வாய்ப்பு எனக் கருதினார். இந்த அடிமை வாழ்வில் இடைவிடாமல் செபம் செய்து, கிறிஸ்தவத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டவரானார். அயர்லாந்தில் பிறசமய வழிபாட்டைச் சார்ந்த சிறார், தன்னை நோக்கி கைகளை விரிப்பதை, ஒருநாள் காட்சியில் கண்டார் பாட்ரிக். இதற்குப் பின் இவர், அயர்லாந்தை கிறிஸ்தவத்திற்கு மனமாற்றுவதற்கு  உறுதி எடுத்தார்.  

புனித பாட்ரிக் அவர்களுக்கு, ஏறக்குறைய 408ம் ஆண்டில் ஒருநாள், இந்த அடிமை வாழ்விலிருந்து தப்பிப்பதற்கு கனவில் ஆலோசனை சொல்லப்பட்டது. அத்துடன், பிரிட்டனுக்குத் திரும்புவதற்கு உதவுவதாகவும் அக்கனவில் குரல் ஒன்று இவருக்குக் கேட்டது. எனவே இக்கனவில் நம்பிக்கை வைத்து, இதை நனவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார் பாட்ரிக். சில கப்பல் பணியாளர்களைக் கெஞ்சி, கப்பலில் ஏறி, மூன்று நாள் கப்பல் பயணம் மேற்கொண்டார். பாட்ரிக்கும், அவரோடு பயணம் செய்தவர்களும் கப்பலை பிரான்ஸ் கடல்பகுதியில் விட்விட்டு கரையை அடைந்தனர். 28 நாள்கள், 200 மைல்கள் சுற்றியலைந்து கடைசியில் தனது குடும்பத்துடன் இணைந்தார் பாட்ரிக். அடிமை வாழ்விலிருந்து விடுதலையடைந்த சுதந்திர மனிதராக பிரான்ஸ் நாட்டின் Auxerre சென்று கல்வி கற்றார். மறைப்பணியாளரான புனித Germain அவர்களின் வழிகாட்டுதலில் குருத்துவப் பயிற்சி பெற்று, ஏறக்குறைய 418ம் ஆண்டில் Auxerre ஆயரால் திருத்தொண்டராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். நாள்கள் சென்றாலும், அயர்லாந்தை கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்ற வேண்டுமென்ற கனவை மட்டும் அவர் ஒருபோதும் மறக்கவில்லை. 432ம் ஆண்டில் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட பாட்ரிக் அவர்கள், விரைவில், திருத்தந்தை முதலாம் செலஸ்தின் அவர்களால் அயர்லாந்துக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பட்டார்.

புனித பாட்ரிக் அவர்கள் அயர்லாந்தை கிறிஸ்தவத்திற்கு எவ்வாறு மாற்றினார்?

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2018, 14:15