தேடுதல்

எரிக்கோவில் இயேசு சோதிக்கப்பட்ட இடம் எரிக்கோவில் இயேசு சோதிக்கப்பட்ட இடம் 

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித பெரிய பக்கோமியுஸ்

கப்பல் பயணம் மேற்கொண்டு களைப்போடு வந்த, இந்த இளைஞர் படைவீரர்களை, கிறிஸ்தவர்கள் துறைமுகத்திற்கே சென்று வரவேற்றனர். பயணக்களைப்போடுவந்த இளைஞர்களுக்கு உணவும் வழங்கினர் கிறிஸ்தவர்கள்

மேரி டிரிசா - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,04,2018. “உண்ணாநோன்பும், செபமும் சிறப்பானவை, மதிப்புமிக்கவை எனினும், நோயின் துன்பங்களை, பொறுமையோடு தாங்கிக்கொள்வது, அவற்றைவிட மிகவும் மேலானது”. இவ்வாறு சொன்னவர், மூன்றாம் நூற்றாண்டில் பிறந்த, புனித பெரிய பக்கோமியுஸ். Pachom என்றால் கழுகு எனப் பொருள்படும். அக்காலத்தில் பாலைநிலத்தில் தனியாக கடுந்துறவு வாழ்வு வாழ்ந்த, வனத்து அல்லது பெரிய அந்தோனியார், புனித பெரிய Macarius, பெரிய Euthymius ஆகிய புனிதர்களுடன், புனித பெரிய பக்கோமியுஸ் அவர்களும், பாலைநில கடுந்துறவு வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறார். கிறிஸ்தவ துறவிகள் தனித்தனியாக மலைகளிலும், பாலைநிலங்களிலும் வாழ்ந்துவந்த காலத்தில், Coenobitic Monasticism அதாவது துறவிகள் குழுவாக வாழ்கின்ற ஓர் அமைப்பை உருவாக்கியவர், புனித பெரிய பக்கோமியுஸ். எகிப்தில், இத்தகைய கிறிஸ்தவ துறவற குழு வாழ்வை உருவாக்கிய இப்புனிதர், எகிப்து நாட்டின் தேபெஸ் (Thebes), அதாவது தற்போதைய Luxor என்ற நகரில், கி.பி.292ம் ஆண்டில், கிறிஸ்தவ மறையைத் தழுவாத பெற்றோருக்குப் பிறந்தார்.  இவரது பெற்றோர் இவருக்கு சிறந்த கல்வி வாய்ப்பை வழங்கினர். இளவயதிலிருந்தே இவர் நல்ல பண்புகளைக் கொண்டிருந்தார். அக்காலத்தில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் உள்நாட்டுப் போர்களின்போது, இளைஞர்கள் இராணுவத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்படுவது வழக்கமாக இருந்தது. அதன்படி, இவரது விருப்பத்திற்கு மாறாக, 21வது வயதில், 315ம் ஆண்டில், இவர் உரோமைப் பேரரசர் கான்ஸ்ட்டைன் படையில் சேர்க்கப்பட்டார்.

கிறிஸ்தவராக மாறியதன் காரணம்

உரோமைப் படையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட புனித பெரிய பக்கோமியுஸ் உட்பட இளைஞர் படைவீரர்கள், நைல்நதியில் கப்பல் பயணம் மேற்கொண்டு அன்றைய நாள் மாலையில் தேபெஸ் நகரை அடைந்தனர். அந்நகர் சிறையைக் காக்கும் பொறுப்பு இப்புதிய படைவீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கப்பல் பயணம் மேற்கொண்டு களைப்போடு வந்த, இந்த இளைஞர் படைவீரர்களை, கிறிஸ்தவர்கள் துறைமுகத்திற்கே சென்று வரவேற்றனர். பயணக்களைப்போடுவந்த இளைஞர்களுக்கு உணவும் வழங்கினர்  கிறிஸ்தவர்கள். அத்துடன், இந்தப் படைவீரர்களுக்கு ஒவ்வொரு நாளும் உணவு கொண்டுவந்து கொடுத்து, அவர்களுக்கு ஆறுதலாகவும் கிறிஸ்தவர்கள் இருந்தனர்.  கிறிஸ்தவர்களின் இப்பண்பு, இளைஞர் பக்கோமியுசின் உள்ளத்தைத் தொட்டது. அதனால், படையிலிருந்து விலகிய பின்னர், கிறிஸ்தவம் பற்றி ஆழமாக அறியவும், கிறிஸ்தவராக மாறவும்  உறுதி எடுத்தார். போரில் ஈடுபடாமலே படையைவிட்டு நீங்குவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்னர், திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவரானார் அவர். அதற்கு பிறகு, கடுந்துறவு வாழ்வு வாழ்ந்துவந்த பல்வேறு கிறிஸ்தவத் துறவிகளைத் தொடர்புகொண்டார் பக்கோமியுஸ். கி.பி.317ம் ஆண்டில், Palamon எனப்படும் மூத்த துறவி ஒருவரின் வழிகாட்டுதலில் வாழத் தொடங்கினார் அவர்.

அக்காலத்தில் மிகவும் பிரபலம் அடைந்திருந்த, இரு கரங்களையும் சிலுவை வடிவில் வைத்து செபிக்கும் முறை உட்பட பல்வேறு செப வழக்கமுறைகளைக் கையாண்டார் பக்கோமியுஸ். Palamon அவர்களுடன் ஏழு ஆண்டுகள் இருந்து பயிற்சி பெற்று, துறவு வாழ்வின் இன்னல்கள் மற்றும் போராட்டங்கள் பற்றி அறிந்துகொண்டார். அதன்பின்னர், புனித வனத்து அந்தோனியார் வாழ்ந்த இடத்துக்கு அருகில், Tabennisi என்ற பழைய சேதமடைந்த கிராமப் பகுதியில் வாழத் தொடங்கினார். அச்சமயத்தில் ஒருநாள், இடுப்பில் கச்சையுடன் துறவி உடையணிந்து, cenobitic துறவு வாழ்வுக்குரிய கொள்கைகள் எழுதப்பட்ட ஒரு பலகையுடன் வானதூதர் ஒருவர் இப்புனிதருக்குத் தோன்றினார். அப்போது அத்தூதர், துறவு வாழ்வில் சேரவிருக்கும் துறவிகளுக்கென ஓர் உறைவிடத்தைக் கட்டு என்றும் சொன்னதைக் கேட்டார் பக்கோமியுஸ். அதற்குப்பின், அவர் துறவிகள் வாழ்வதற்கு பல குடிசைகளை அமைத்தார். அச்சமயத்தில் அவரும் அவரின் மூத்த சகோதரர் ஜானும் மட்டுமே இருந்தனர். அப்போது ஜான் அவரிடம், இவை அவசியமா எனக் கேட்டார். அதற்கு அவர், நான் கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றுகிறேன் எனப் பதில் சொன்னார்.

துறவற குழும வாழ்வு ஆரம்பம்

புனித பக்கோமியுசுக்கு முன்னர், கடும் தவ வாழ்வு வாழ்ந்த Macarius என்ற துறவி, துறவு இல்லங்கள் போன்ற அமைப்பைக் கொண்ட பல சிறு குடிசைகளை உருவாக்கியிருந்தார். புனித வனத்து அந்தோனியாரின் தனிமை வாழ்வை, உடலளவில் அல்லது மனத்தளவில் வாழ இயலாமல் இருந்த புனித ஆண்கள், குழு போன்ற அமைப்பை உடைய இக்குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். பக்கோமியுஸ் அவர்கள், 318 மற்றும் 323ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், எகிப்து நாட்டின் Tabennisiல், முதல் துறவு ஆதீனத்தை ஆரம்பித்தார். பக்கோமியுசின் சகோதரர் ஜான் அவர்களும் அவரோடு இணைந்தார். விரைவில் Tabennisiஐ சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட துறவிகள் வாழத் தொடங்கினர். குடிசைகளாக இருந்தவைகளை, துறவு இல்லங்களாக, துறவற நிறுவனங்களாக மாற்றினார் அவர். அதுவரை, கடும் தவ வாழ்வு வாழ்ந்த கிறிஸ்தவ ஆண் மற்றும் பெண் துறவிகள், தனித்தனி குடிசைகள் அல்லது குகைகளில் வாழ்ந்து வந்தனர். முக்கிய வழிபாட்டு நேரங்களில் மட்டும் அவர்கள் சந்தித்துக்கொண்டனர். பக்கோமியுஸ் அவர்கள் உருவாக்கிய ஆண் மற்றும் பெண் துறவு குழு இல்லங்களில் ஒரு தலைவரின்கீழ் தங்கள் சொத்துக்களைப் பொதுவில் வைத்து வாழத் தொடங்கினர். தனிமை வாழ்வுமுறையில் பழக்கப்பட்ட சிலருக்கு இந்த குழு வாழ்க்கைமுறை ஏமாற்றத்தை அளித்தது. ஏனெனில் பல்வேறு வெளிப்புற சூழல்களுக்கு அவர்கள் உட்படுவதாய் உணர்ந்தனர். இதையறிந்த பக்கோமியுஸ் அவர்கள், அத்தகைய துறவிகள், தங்கள் வாழ்வு முழுவதையும் ஆன்மீக வாழ்க்கையில் மட்டுமே அர்ப்பணிக்க அனுமதித்தார். குழுக்களின் நிர்வாகப் பொறுப்பை அவரே ஏற்றுக் கொண்டார். பக்கோமியுஸ் அவர்களை, துறவிகள், "Abba " அதாவது தந்தை என்றே அழைத்தனர். இந்தச் சொல்லிலிருந்தே, "Abbot" என்ற வார்த்தை பிறந்தது. துறவிகள் வாழ்கின்ற இல்லத் தலைவர் Abbot என அழைக்கப்படுகிறார்.

Tabennisiலுள்ள துறவு இல்லம், பல நேரங்களில் விரிவாக்கப்பட்டாலும், அது விரைவில் சிறியதாக மாறியது. Pabau (Faou) என்ற இடத்தில் இரண்டாவது துறவு இல்லம் தொடங்கப்பட்டது. புனித பக்கோமியுஸ் அவர்கள், Pabau என்ற துறவு இல்லத்திலே தன் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்டார். கி.பி.333ம் ஆண்டில் புனித அத்தானிசியுஸ், புனித பக்கோமியுஸ் அவர்களைச் சந்தித்து, திருநிலைப்படுத்த விரும்பினார். ஆனால் இப்புனிதர், அவரிடமிருந்து தப்பியோடிவிட்டார். இப்புனிதரும், ஆரியனிச தப்பறைக் கொள்கைகளைக் கடுமையாய் எதிர்த்தார். செசாரிய நகர் புனித பேசில், இவரைச் சந்தித்து செசாரியாவில் இவரின் கொள்கைகள் பலவற்றை அமல்படுத்தினார். பக்கோமியுஸ் அவர்களின் கடும் தவ வாழ்வு கொள்கைகள் கீழை வழிபாட்டுமுறை திருஅவையில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவரின் கொள்கைகள், மேற்குலகில், துறவற குழு வாழ்வைத் தொடங்கிய, புனித பெனடிக்ட் அவர்களின் கொள்கைகளோடு ஒப்பிடப்படுகின்றது.

பக்கோமியுசின் இறுதிக்காலம்

பக்கோமியுஸ் அவர்கள், ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள், துறவு இல்லங்களின் தலைவராகப் பணியாற்றியிருக்கின்றார். கொள்ளை நோய் ஏற்பட்ட காலத்தில், தன் துறவிகள் விசுவாசத்தில் உறுதியாக இருக்குமாறு இவர் தூண்டியிருக்கிறார். அத்துடன் தனக்குப்பின் அடுத்த தலைவரையும் அவர் நியமித்தார். இவர் 348ம் ஆண்டில் மே 9ம் தேதி, தனது 53வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

பக்கோமியுஸ் அவர்கள் காலமான சமயத்தில், எட்டு துறவு இல்லங்களும், நூற்றுக்கணக்கான துறவிகளும் இருந்துள்ளனர். இப்புனிதரின் கொள்கைகள், எகிப்திலிருந்து பாலஸ்தீனம், யூதேயா பாலைநிலம், சிரியா, வட ஆப்ரிக்கா, இன்னும் மேற்கு ஐரோப்பா வரை பரவின. அவற்றில் ஏறக்குறைய ஏழாயிரம் துறவிகள் இருந்தனர் எனச் சொல்லப்படுகின்றது. இவரின் புனித வாழ்வு பலரைக் கவர்ந்திழுத்தது.

"அனைத்தும் பாங்காகவும் ஒழுங்காகவும் நடைபெற வேண்டும் (1கொரி.14:40)" என்ற புனித பவுலடிகளாரின் பாணியில் வாழ்ந்தவர் புனித பெரிய பக்கோமியுஸ். இப்புனிதர் சொன்னார் - பொறுமையே எல்லா அருளையும் வெளிப்படுத்துகின்றது. புனிதர்கள் தங்களுக்கு வாக்குறுதியாக அளிக்கப்பட்ட அனைத்தையும் பொறுமை வழியாகவே பெறுகின்றனர் என்று.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 July 2018, 13:25