லாவோஸ் நீர்த்தேக்கம் உடைந்ததால் பாதிப்படைந்தவர்கள் லாவோஸ் நீர்த்தேக்கம் உடைந்ததால் பாதிப்படைந்தவர்கள் 

லாவோஸ் நாட்டிற்கு நிவாரண உதவியாக 50,000 டாலர்

லாவோசில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கம் உடைந்ததால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கொரியத் திருஅவை உதவி

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

லாவோசின் தென் பகுதியிலுள்ள Attapeu மாநிலத்தில் நீர்த்தேக்கம் உடைந்ததால் ஏற்பட்டுள்ள கடும் பொருள்சேதம் மற்றும் உயிர்ச் சேதங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்து, அந்நாட்டிற்கு அவசரகால உதவியாக, ஐம்பதாயிரம் டாலர் நிதியுதவியை அனுப்பியுள்ளார், தென் கொரிய கர்தினால் Andrew Soo-jung Yeom.

தென்கிழக்கு ஆசியாவில் மலைகள் நிறைந்த நாடாகிய லாவோசில் ஏற்பட்டுள்ள இப்பேரிடரில், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து அனுதாபம் தெரிவிக்கும் செய்தியை அனுப்பியுள்ள சோல் கர்தினால் Yeom அவர்கள், இப்பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள எல்லாருக்கும் தன் செபங்களையும் தெரிவித்துள்ளார்.

லாவோஸ் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி, பேராயர் Paul In-Nam TSCHANG அவர்களுக்கு, தனது ஒருமைப்பாட்டுணர்வு செய்தியையும், சோல் உயர்மறைமாவட்டத்தின் நிதியுதவியையும் அனுப்பியுள்ளார், கர்தினால் Yeom. (AsiaNews)  

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், லாவோஸ் நாட்டில் இடம்பெற்ற இப்பேரிடர் குறித்த தன் கவலையையும், அம்மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவிக்கும் தந்திச் செய்தி ஒன்றை ஏற்கனவே அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாவோசில், தென் கொரியாவின் நிதியுதவியால், ஏறத்தாழ நூறு கோடி டாலரில் கட்டப்பட்ட Xepian Xe Nam Noy நீர்த்தேக்கம் உடைந்ததில், ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2018, 15:01