ஈராக் நாட்டு கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ ஈராக் நாட்டு கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ 

அமைதியை வளர்க்க தொடர்ந்து பாடுபடுவேன் – கர்தினால் சாக்கோ

இராணுவத்தால் கொணர முடியாத அமைதியை, கிறிஸ்தவ இஸ்லாமிய உரையாடல் கொண்டு வரும் – ஈராக் கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டில் ஒருவரை ஒருவர் மதிப்பதற்கும், உரையாடலை வளர்ப்பதற்கும் தேவையானச் சூழலை வளர்க்க தான் தொடர்ந்து பாடுபடுவேன் என்று ஈராக் நாட்டு கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் அந்நாட்டு மக்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பாரி நகர் சந்திப்பின் தொடர்ச்சியாக...

மத்தியக்கிழக்குப் பகுதியிலும், புனித பூமியிலும் அமைதி வேண்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டை, ஜூலை 7ம் தேதி இத்தாலியின் பாரி நகரில் மேற்கொண்ட வேளையில், அந்த வழிபாட்டில் கலந்துகொண்ட கர்தினால் சாக்கோ அவர்கள், தன் நாட்டுக்கு திரும்பியபின், இம்மடலை அனுப்பியுள்ளார்.

ஈராக், சிரியா, புனித பூமி ஆகிய பகுதிகள் திருத்தந்தையின் உள்ளத்தில் என்றும் இடம்பெற்றிருக்கும் நாடுகள் என்பதை தன் மடலில் குறிப்பிட்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், தான் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையாக 5 ஆண்டுகளுக்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அமைதியை உருவாக்க, தன்னை வழங்கிய அதே அர்ப்பணத்துடன், இன்றும் தான் செயல்படுவதாகக் கூறியுள்ளார்.

இராணுவம் அமைதியைக் கொணராது

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் அமைதி திரும்புவதற்கு, இராணுவத்தின் உதவியை நாடியிருப்பது பொருளற்ற ஒரு பாதை என்பதை வலியுறுத்திக் கூறும் கர்தினால் சாக்கோ அவர்கள், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும், உரையாடலையும், ஒருவரை ஒருவர் மதிப்பதையும் மேற்கொள்வது மட்டுமே அமைதியைக் கொணரும் என்று எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 July 2018, 14:53