கர்தினால் John Onaiyekan கர்தினால் John Onaiyekan  

மக்களின் நம்பிக்கையிழந்த அரசு பதவி விலகட்டும், - கர்தினால்

அப்பாவி மக்களின் கொலைகளுக்கு அரசு நேரடிக் காரணமில்லை, மாறாக, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதன் வழியாக, அதற்கு ஊக்கமளிக்கிறது, என குற்றம் சாட்டுகிறார் நைஜீரிய கர்தினால்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள் 

நைஜீரியா நாட்டின் அரசுத்தலைவரிலும் அவரின் நிர்வாகத்திலும் நாட்டு மக்கள் நம்பிக்கையிழந்துள்ளதாக நைஜீரியாவின் அபுஜா பேராயர், கர்தினால் John Onaiyekan அவர்கள் தெரிவித்தார்.

நிர்வாகம் குறித்தோ, மக்களின் வாழ்வையும் உடைமைகளையும் காப்பாற்றவேண்டும் என்ற முக்கிய கொள்கை குறித்தோ, நைஜீரிய அரசுத்தலைவர் Muhammadu Buhariயின் நிர்வாகம் கவலை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை என்று கூறிய கர்தினால் Onaiyekan அவர்கள், நைஜீரியாவை சரிவில் இருந்து காப்பாற்றவேண்டும், அல்லது,  அரசுத் தலைவர் பதவி விலகவேண்டும் என ஆயர்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

எவ்வித தண்டனை பயமும் இன்றி, சிலர், ஆயுதம் தாங்கியவர்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அப்பாவி மக்களைக் கொலை செய்வது, உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்த கர்தினால் Onaiyekan அவர்கள், அப்பாவி மக்களின் கொலைகளுக்குப் பின்னரும், அரசு, தன் செயலற்ற தனத்தை வெளிப்படுத்தியிருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என குற்றம் சாட்டினார்.

அரசின் ஆதரவோடு இந்த கொலைகள் நடக்கின்றன என்றோ, அரசின் ஆட்கள் இதைச் செய்கிறார்கள் என்றோ தலத்திருஅவை குற்றம் சுமத்தவில்லை, மாறாக, கொலைகள் குறித்து அரசு மௌனம் காப்பதையே குற்றம் சொல்கிறோம் எனவும் தெரிவித்தார் கர்தினால் Onaiyekan.

மக்களின் வாழ்வையும், உடைமைகளையும், காப்பாற்றத் தவறியதாலேயே, அரசின் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர் என்பதை புரிந்துகொண்டு, அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள Buhari அவர்களின் அரசு முன்வரவேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார், அபுஜா பேராயர், கர்தினால் Onaiyekan.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2018, 15:41