கர்தினால் O'Malley திருத்தந்தையைச் சந்தித்துப் பேசுகிறார் கர்தினால் O'Malley திருத்தந்தையைச் சந்தித்துப் பேசுகிறார் 

பாலியல் முறைகேடுகளில் குற்றம்சாட்டப்பட்ட ஆயர்கள் பற்றி..

பாலியல் முறைகேடு விவகாரங்கள் குறித்த திருஅவையின் கொள்கைகளில் ஆயர்கள், அருள்பணியாளர்களுக்கு இடையே வேறுபாடு கூடாது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவையில் சிறார் பாலியல் முறைகேடுகள் குறித்த விவகாரங்களில் அருள்பணியாளர்களுக்குக் கடைப்பிடிக்கப்படும் அதே விதிமுறைகள், ஆயர்கள் அல்லது கர்தினால்களுக்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று, திருஅவையின் உயர் அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் முன்னாள் பேராயர் கர்தினால் தியோடர் மெக்காரிக் அவர்களுக்கு எதிராக, பல, பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதையடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள, பாஸ்டன் பேராயரும், சிறார் பாதுகாப்பு குறித்த திருப்பீட குழுவின் தலைவருமான கர்தினால் Sean O'Malley அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்விவகாரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மன்னிப்புக் கேட்பதைவிட, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், கத்தோலிக்கச் சமுதாயத்தின் நேர்மையான கோபத்திற்குப் போதுமான அளவில் பதிலும் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார், கர்தினால் O'Malley.

சிறார் மற்றும் வயதுவந்தோரிடம் பாலியல் முறையில் தவறாக நடந்துகொண்டு, கன்னிமை வார்த்தைப்பாட்டை மீறுகின்ற ஆயர்கள் விவகாரத்தில், உறுதியான மற்றும் தெளிவான கொள்கைகள்  திருஅவைக்குத் தேவைப்படுகின்றன என்றும், கர்தினால் O'Malley அவர்கள் கூறியுள்ளார்.

பல்வேறு மறைமாவட்டங்களில் தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து இத்தகைய தீர்மானத்திற்குத் தான் வந்துள்ளதாகவும், திருஅவைக்கு மூன்று செயல்திட்டங்கள் அவசியமாகின்றன எனவும், இவை செயல்படுத்தப்படாவிட்டால், ஏற்கனவே பலவீனமடைந்துள்ள திருஅவையின் அறநெறி அதிகாரம் அச்சுறுத்தப்படும் மற்றும் திருஅவையின் திருப்பணிக்குத் தேவையான நம்பிக்கையை இழக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார், கர்தினால் O'Malley.

பாலியல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் மீது நியாயமான மற்றும் விரைவான விசாரணை நடத்துதல்; எல்லா நிலைகளிலும், குறிப்பாக, ஆயர்களைப் பொறுத்தவரை, திருஅவையின் நிலைப்பாடு மற்றும் கொள்கைகளில் போதுமான மதிப்பீடு செய்தல்;  ஆயர்கள் மற்றும் கர்தினால்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கையாளப்படும் நடைமுறைகள் குறித்து, விசுவாசிகளுக்கு மிகத் தெளிவாக அறிவித்தல் ஆகிய மூன்று செயல்திட்டங்கள் அவசியம் என வலியுறுத்தியுள்ளார், பாஸ்டன் கர்தினால் O'Malley.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2018, 15:53