தேடுதல்

அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் மும்பை சென்றிருந்தபோது அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் மும்பை சென்றிருந்தபோது 

Humanae Vitae வாழ்வின் உண்மைகளை உறுதி செய்கிறது

அருள்பணியாளர்கள் நாளில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் மனித வாழ்வின் புனிதம் பற்றிய திருமடல் குறித்து மும்பை பேராயர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

மனித வாழ்வு எனப்படும் Humanae Vitae திருமடல், திருஅவைக்கு மாபெரும் கொடை எனவும், இது, வாழ்வு, திருமணம், மற்றும் குடும்பத்தின் இன்றியமையாத கிறிஸ்தவ விழுமியங்களை அறிவிக்கின்றது எனவும், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மும்பை குருத்துவக் கல்லூரியில் புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ஏறக்குறைய 300 அருள்பணியாளர்களுக்கு உரையாற்றிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், வாழ்வுக்குத் திறந்த மனம் கொண்டிருக்கவும், தம்பதியரை, திருமண அருளடையாளத்திற்கு நன்றாகத் தயாரிக்கவும், அருள்பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அதாவது 1968ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி வெளியிடப்பட்ட திருத்தந்தையின் மனித வாழ்வு திருமடலின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய  கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மும்பை கத்தோலிக்கத் திருஅவை, எல்லா நிலைகளிலும் வாழ்வைப் பேணிப் பாதுகாப்பதற்குரிய நிலைப்பாட்டில், தடுமாற்றமில்லாமல் உறுதியுடன் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில், ஒரு மணி நேர திருநற்கருணை ஆராதனையில் பங்குகொண்டு, Humanae Vitae திருமடல் பற்றி தியானிக்குமாறும் மும்பை பேராயர் கேட்டுக்கொண்டார்.

1964ம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற தேசிய திருநற்கருணை மாநாட்டில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் கலந்துகொண்டதை நினைவுபடுத்தினார், கர்தினால் கிரேசியஸ். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2018, 16:02