மியான்மார் பச்சை மாணிக்கக் கல் சுரங்கங்கள் மியான்மார் பச்சை மாணிக்கக் கல் சுரங்கங்கள் 

சுரங்கப் பணிகளில் மனித உரிமைகள் காக்கப்பட...

கச்சின் மாநிலத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தொழிற்சாலை விதிமுறைகள் அவசியம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில் பச்சை மாணிக்கக் கல் சுரங்கங்களின் பங்குதாரர்கள், சுரங்கப் பணிகளின் விதிமுறைகளை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார், அந்நாட்டு ஆயர் ஒருவர்.

கச்சின் மாநிலத்தின் Myitkyina ஆயர் Francis Daw Tang அவர்கள் கூறுகையில், ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள கச்சின் மாநிலத்தில் சுரங்கங்களிலிருந்து தோண்டப்படும் மண் குவியல்கள் சரிவர நிர்வகிக்கப்படாததால், ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்காண மக்கள் இறக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

தங்கள் உயிரைப் பணயம் வைத்து சுரங்கங்களில் பணியாற்றுவோரின் மனித மாண்பு மதிக்கப்படுமாறு கேட்டுக்கொண்ட ஆயர் Daw Tang அவர்கள், சுரங்கங்கள் ஏற்படுத்தும் ஆபத்துகள், குறிப்பாக, மழைக்காலத்தில் அவை உருவாக்கும் ஆபத்துகள் குறித்து உள்ளூர் அதிகாரிகள், பொறுப்பானவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

கச்சின் மாநிலத்தில், கடந்த மாதத்தில், பச்சை மாணிக்கக் கல் சுரங்கத்திலிருந்து தோண்டப்பட்ட மண்குவியல்கள் சரிந்ததில், குறைந்தது 27 பேர் காணாமல்போயுள்ளனர். இவர்கள் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், அம்மாநிலத்தில் 2011ம் ஆண்டில் மீண்டும் தொடங்கிய சண்டையில், ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் புலம்பெயர்ந்துள்ளனர். (UCAN).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2018, 16:08