தேடுதல்

போலந்து ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Stanislaw Gadecki. போலந்து ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Stanislaw Gadecki. 

போலந்து நாடாளுமன்றத்தின் 550ம் ஆண்டு நிறைவில் திருஅவை

போலந்து நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டதன் 550ம் ஆண்டு நிறைவு நிகழ்வில், போலந்து ஆயர் பேரவைத் தலைவர் கலந்துகொண்டு ஆட்சியாளர்களுக்கு இரு கேள்விகளை முன்வைத்தார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,14,2018. அதிகாரத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே, கேட்டுக்கொள்ள வேண்டிய இரு கேள்விகளை, போலந்து அரசு அதிகாரிகளுக்கென ஆற்றப்பட்ட திருப்பலியில் கூறினார், போலந்து ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Stanislaw Gadecki.

போலந்து நாடு மீண்டும் சுதந்திரம் அடைந்ததன் நூறாம் ஆண்டு மற்றும் அந்நாட்டின் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டதன் 550ம் ஆண்டு நிறைவையொட்டி, ஜூலை 13, இவ்வெள்ளிக்கிழமையன்று, வார்சா நகரின் பேராலயத்தில், வார்சா கர்தினால்  Kazimierz Nycz அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார், பேராயர் Gadecki.

குடிமக்களுக்குச் சிறந்த சேவையாற்றும்பொருட்டு, அம்மக்களை அன்பு கூர்கிறேனா? மற்றவரின் கருத்துக்களைக் கேட்பதற்கு, போதுமான அளவு தாழ்ச்சியுள்ளம் கொண்டு, சிறந்த வழியைத் தேர்ந்து கொள்கிறேனா? ஆகிய இரு கேள்விகளை எழுப்பிய பேராயர் Gadecki அவர்கள், அதிகாரத்தைச் செயல்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே, இக்கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு நிறைவு நிகழ்வு, குறிப்பிடத்தக்க மகிழ்வைக் கொண்டிருக்கும் நாள் என்றுரைத்த பேராயர் Gadecki அவர்கள், ஐரோப்பாவில் மிகப் பழமையான நாடாளுமன்றங்களில் ஒன்றான போலந்து நாடாளுமன்றத்தின் மரபு மற்றும், கலாச்சாரத்தை நினைத்து நாம் பெருமிதம் அடைய வேண்டும் என்றார்.

இத்திருப்பலியில் போலந்து அரசுத்தலைவர் Andrzej Duda, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2018, 15:10