Vatican News
சீடர்கள் இருவர் இருவராக அனுப்பப்படுதல் சீடர்கள் இருவர் இருவராக அனுப்பப்படுதல் 

பொதுக்காலம் 16ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

வேலைகளில் மூழ்கித் தத்தளிக்கும் நாம், ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனுக்கும், நம்முடைய நலனுக்கும் தகுந்த இடத்தை வழங்க முயல்வோம்.

லூயிஸ் ஜெரோம்  –  வத்திக்கான் செய்திகள்

20ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்தக் கவிஞர்களில் ஒருவரான, வில்லியம் பட்லர் ஏட்ஸ் (William Butler Yeats) அவர்கள், 1919ம் ஆண்டு, அதாவது, முதல் உலகப் போர் முடிவடைந்திருந்த நேரத்தில், 'இரண்டாம் வருகை' (The Second Coming) என்ற தலைப்பில் கவிதையொன்றை வெளியிட்டார். இக்கவிதையில், கவிஞர் ஏட்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள துன்பகரமான கருத்துக்கள், வெளியிட்டுள்ள கருத்துக்கள், நாம் வாழும் இன்றையச் சூழலுக்கும் மிகப் பொருத்தமாகத் தெரிகின்றன. இதோ, அக்கவிதையின் ஒரு சில வரிகள்:

"சுற்றிலும் பலவும் வீழ்கின்றன; மையம் எதையும் தாங்க இயலவில்லை;

அராஜகம் இவ்வுலகில் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது

இரத்தம் தோய்ந்த வெள்ளம் எங்கும் பாய்கிறது

மாசற்ற நிலை மூழ்கடிக்கப்பட்டுள்ளது

மிகச் சிறந்தவர்கள், தங்கள் மனஉறுதியை இழந்துள்ள வேளையில்,

மிக மோசமானவர்கள் வெறியின் உச்சத்தில் உள்ளனர்"

மையமாக, நடுநிலையோடு செயலாற்றவேண்டிய உலக அரசுகள் பல, தட்டுத் தடுமாறி வீழ்கின்றனவோ என்ற உணர்வு நமக்குள் எழுகிறது. நடுநிலை தவறியுள்ள அரசுகள் உருவாக்கும் ஆழமான பிரிவு உணர்வுகள், ஒவ்வொரு நாட்டையும், ஊரையும் பிளவுபடுத்தியுள்ளன. "ஊர் இரண்டுபட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்ற பழமொழிக்கேற்ப, மக்கள் பிளவுபட்டு நிற்பது, தலைவர்களுக்குக் கொண்டாட்டமாக மாறியுள்ளது.

பல தலைவர்கள், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பொய்களையும், முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களையும் மக்கள் மீது திணித்து வருவதைக் காண்கிறோம். உலகின் பெரும் சக்திகள் என்று கருதப்படும் இரு நாடுகளின் தலைவர்கள், அண்மையில் ஹெல்சின்கி நகரில் சந்தித்தபோது, ஊடகங்களுக்கு அளித்த ஒரு பேட்டியும், அவர்களில் ஒரு தலைவர், அடுத்தநாள், தன் நாட்டுக்குத் திரும்பியதும், முந்திய நாள் தன் பேட்டியில் கூறியவற்றை மறுத்துக் கூறி மழுப்பியதும், நம்மை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்துகின்றன. மக்களை முட்டாள்களாக்க முயலும் இத்தலைவரைப் போலவே, பல நாட்டுத் தலைவர்களும், பிரதமர்களும், எவ்வித தயக்கமும் இன்றி, ஒவ்வொரு நாளும் மக்கள்முன் பொய்களை கூறி வருகின்றனர்.

அரசும், தலைவர்களும் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், 'சமூக விரோதிகள்' என்று பழி சுமத்தப்படுகின்றனர். இந்தியாவில், பழி சுமத்தப்பட்ட பலரை, வெறிகொண்ட கும்பல்கள் எவ்வித அச்சமுமின்றி உயிரோடு எரித்து கொன்றுள்ளனர்.

தீயிட்டுக் கொளுத்தும் தீயவர்களை கடுமையாகத் தண்டிக்கும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று, இந்தியாவின் உச்ச நீதிமன்றம், அண்மையில் (ஜூலை 17), இந்திய பாராளுமன்றத்திற்கு ஆணை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கண்டனமும், தீர்மானமும் வெளியான அதே நாளில், சமூக ஆர்வலராக, பல ஆண்டுகள் பணியாற்றிவரும், 78 வயது நிறைந்த, சுவாமி அக்னிவேஷ் அவர்கள், ஜார்கண்ட் மாநிலத்தில், பாரதீய ஜனதா கட்சியின் 'யுவ மோர்ச்சா' எனப்படும் இளையோர் அணியால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில், மக்கள் கூடிவந்து ஒருவரை உயிரோடு எரிக்கும் நிகழ்வுகளுக்கு, 'வாட்ஸப்' வழியே பரப்பப்படும் வதந்திகள் காரணம் என்று அரசும், ஊடகங்களும் கூறிவருகின்றன. ஆனால், இக்கொடூரங்களுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர், சிறுபான்மையினர், மற்றும், அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் என்ற உண்மையும், இக்கொடூரங்கள், பட்டப்பகலில் வெளிப்படையாக நிகழ்ந்துள்ள வேளைகளில், அங்கு காவல்துறையினர் யாரும் வரவில்லை என்ற உண்மையும், வேறு பல ஐயங்களை உருவாக்குகின்றன.

இந்தியாவில் நிகழ்வதுபோல், இன்னும் பல நாடுகளில் கொடுமைகள் நிகழ்கின்றன. அதிகாரத்தில் இருப்போரை கேள்விகள் கேட்கத் துணியும் மனிதர்கள் பலர், கொலை செய்யப்படுகின்றனர், அல்லது, காணாமற் போகின்றனர். அரசுக்கு சவாலாக இருப்போர், நாட்டைவிட்டு வெளியேறி வாழ்ந்தாலும், நாடுவிட்டு நாடு சென்று, கொலை செய்வதற்கு, அரசின் உளவாளிகள் அனுப்பப்படுகின்றனர்.

"சக்தியே சரியானது" அல்லது, "சக்திமிகுந்தோரே சரியானவர்கள்" (Might is Right) என்ற தவறானக் கருத்தை சரியென்று நிலைநாட்ட முயன்றுவரும் தலைவர்களை, இஞ்ஞாயிறு வழங்கப்பட்டுள்ள முதல் வாசகம், வன்மையாகக் கண்டனம் செய்கிறது. ஆண்டவர் கூறும் கண்டனமாக, இறைவாக்கினர் எரேமியா பதிவு செய்துள்ள கடினமான சொற்கள், இஞ்ஞாயிறன்று, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில், பீடத்திலிருந்து அறிக்கையிடப்படுவதை, இவ்வுலகிற்கு இறைவன் வழங்கும் ஓர் எச்சரிக்கையாக நாம் எண்ணிப்பார்க்கலாம். மக்களை அழித்துச் சிதறடிக்கும் தலைவர்களுக்கு, இறைவன் விடுக்கும் எச்சரிக்கை இதோ:

இறைவாக்கினர் எரேமியா 23: 1-2

ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஐயோ கேடு!... நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்தீர்கள்; அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர்.

கண்டனம், தண்டனை என்ற கருத்துக்களோடு இறைவனின் சொற்கள் முடிவடையவில்லை. நம்பிக்கை தரும் சொற்களையும் இறைவன் கூறியுள்ளார்:

இறைவாக்கினர் எரேமியா 23: 3-4

என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச்சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப்பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும். அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா; திகிலுறா; காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர்.

நம்பிக்கை தரும் இச்சொற்களைத் தொடர்ந்து, "நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள ‘தளிர்’ தோன்றச் செய்வேன்" என்று, இறைவன் அளிக்கும் வாக்கு, இயேசுவின் வடிவில் வந்த நல்லாயன் என்பதை, நாம் உறுதியாக நம்புகிறோம்.

இறைவாக்கினர் எரேமியா 23: 5-6

ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நாள்கள் வருகின்றன; அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள "தளிர்" தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும்.

ஞானம், நீதி, நேர்மை ஆகிய உன்னதப் பண்புகளைக் கொண்ட மேய்ப்பரான இயேசு, ஒரு 'தளிர்' போல, மென்மையான உள்ளமும் கொண்டிருந்தார் என்பதை, இன்றைய நற்செய்தி விவரிக்கின்றது.

நற்செய்திப் பணிக்கென இயேசு தன் சீடர்களை அனுப்பிய நிகழ்வை சென்ற வாரம் சிந்தித்தோம். அந்நிகழ்வின் தொடர்ச்சியை, இன்றைய நற்செய்தியில் கேட்கிறோம். தங்கள் அருள்பணியில் நிகழ்ந்தவற்றை, ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்ட சீடர்களிடம், 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்று இயேசு கூறுகிறார். உலகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது, இயேசு கூறியச் சொற்கள், புதிரானதாக, பொருளற்றதாகத் தெரிகின்றன.

மக்கள் மத்தியில் அட்டகாசமாகப் பணிபுரிந்து திரும்பி வந்துள்ள சீடர்களைப் பாலைநிலத்திற்குப் போய் ஒய்வெடுக்கச் சொன்னதற்குப்பதில், "சீடர்களே, பிரமாதம், இன்னும் பல இடங்களுக்குச் சென்று போதியுங்கள், அருஞ்செயல்களை ஆற்றுங்கள்" என்று இயேசு உற்சாகப்படுத்தி, மீண்டும் அருள்பணிக்கு அனுப்பியிருக்க வேண்டாமா?

தன்னலம் மிக்க ஒரு தலைவன், தன்னுடைய சீடர்களுக்கு, இவ்விதக் கட்டளையைத் தந்திருப்பார். அத்தலைவனுக்குத் தேவையானதெல்லாம், அவரது பேரும், புகழும், மக்கள் மத்தியில் மீண்டும், மீண்டும் ஒலிக்கவேண்டும். தன் சுயநலத் தேவைக்காக, தொண்டர்களை, பயன்படுத்தி, தேவைகள் நிறைவடைந்ததும், தொண்டர்களைத் தூக்கியெறியும் எத்தனைத் தலைவர்களை நாம் பார்த்திருக்கிறோம்?

தங்கள் சுயநலத்திற்காகப் பிறரைப் பயன்படுத்தி, தூக்கியெறியும் தலைவர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, இறைவன் அனுப்பியவரே இயேசு. அந்த நல்லாயன், தன் சீடர்கள்மீது உண்மையான அக்கறை கொண்டிருந்ததை, 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்ற சொற்கள் தெளிவாக்குகின்றன. நல்லாயன் இயேசுவுக்கு, தன் பணிகளும், கொள்கைகளும் முக்கியம்தான். ஆனால், அதே வேளை, அப்பணிகளைச் செய்யும் சீடர்களும் மிகவும் முக்கியம். பணி செய்துத் திரும்பியுள்ள சீடர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை ஓய்வெடுக்கும்படி பணிக்கிறார் இயேசு. பாலைநிலத்தில் தன் சீடர்களை ஓய்வெடுக்க இயேசு அழைத்ததை, ஒரு சிறு உவமைக் கதை வழியே புரிந்துகொள்ள முயல்வோம்.

கற்பனை கதைகள் சொல்வதில் தலைசிறந்த கலைஞர், ஈசோப், அடிக்கடி குழந்தைகளுடன் அமர்ந்து, கதை சொல்லி, சிரித்து மகிழ்ந்திருந்தார். அவர் ஏன் தன் நேரத்தை, குழந்தைகளோடு வீணடிக்கிறார் என்று அவரது நண்பர்கள் கேட்டனர். அவர் நண்பர்கள் நடுவே ஒரு வில்லைக் கொணர்ந்தார். அந்த வில்லில் கட்டப்பட்டிருந்த நாணைத் தளர்த்தி, அதை தரையில் வைத்தார். பின் தன் நண்பர்களிடம், "நாண் தளர்த்தப்பட்ட இந்த வில்லைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். நண்பர்களால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. எனவே, ஈசோப் அவர்கள், அந்த வில்லை கையில் வைத்துக்கொண்டு, "இந்த வில்லின் நாண் எப்போதும் விறைப்பாக இழுத்துக் கட்டப்பட்டிருந்தால், இந்த வில் விரைவில் முறிந்துபோகும். அவ்வப்போது நாணைத் தளர்த்தி, தேவைப்படும்போது மட்டும் அதை விறைப்பாகக் கட்டினால், வில்லை அதிக காலம் பயன்படுத்தமுடியும்" என்று கூறினார். பணியும், ஓய்வும் இணைந்து செல்லவேண்டும். ஓயாத பணி, ஒருவரை உடைத்துவிடும்.

தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், இயந்திரமாக இயங்கும் நாம், ஒவ்வொரு நாளும், தேவையான அளவு ஓய்வெடுப்பது முக்கியம். ஓய்வுக்கு நேரம் ஒதுக்குவதுபோல், இறைவனுக்கும் நேரம் ஒதுக்கி, தியானத்தில் ஈடுபடுவது, உடலுக்கும், உள்ளத்திற்கும் இன்னும் பல நன்மைகளைக் கொணரும். நம்மை ஒருமுகப்படுத்தும் தியானங்கள், எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை, ஒரு சிறுவர் குழு இவ்வுலகிற்கு அண்மையில் சொல்லித்தந்துள்ளது.

10 முதல் 16 வயது நிறைந்த 12 சிறுவர்களும், அவர்களது வழிகாட்டியான Ekaphol Chantawong அவர்களும், தாய்லாந்து நாட்டின் Tham Luang குகையில் 16 நாட்களாக அடைபட்டிருந்த நிகழ்வு, உலகெங்கும் பரவிய ஒரு செய்தி. ஜூலை 8,9,10 ஆகிய மூன்று நாள்களில் இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டது, பெரும் புதுமை என்று பேசப்படுகிறது. அச்சிறுவர்கள் அனைவரும் நல்ல உடல், மன நலத்துடன் அக்குகையைவிட்டு வெளியேறியதை, அதைவிட பெரிய புதுமையாகக் கருதவேண்டும்.

ஜூன் 23ம் தேதி இந்த குகைக்குள் சிக்கிக்கொண்ட இச்சிறுவர்களும், வழிகாட்டியும், 9 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். அந்த 9 நாட்களும், அந்தக் குகையில், இருளில், குளிரில், உணவு ஏதுமின்றி, அச்சிறுவர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பது, பெரும் புதுமையே. இயல்பாகவே, சிறுவர்கள் என்றால் துடிப்பு நிறைந்தவர்கள் என்பதை அறிவோம். அதிலும், குகைக்குள் சென்ற சிறுவர்கள், ஒரு கால்பந்தாட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள். துடிப்பும், துறுதுறுப்பும் நிறைந்த அச்சிறுவர்கள், ஒன்பது நாட்கள், அதாவது, 216 மணி நேரங்கள், 12,960 நிமிடங்கள், வெளி உலகுடன் எவ்விதத் தொடர்பும் இன்றி, இருளில், குளிரில், பசியுடன் வாழ்ந்தனர் என்பது, எண்ணிப்பார்க்க இயலாத ஒரு சூழல். இதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்களது வழிகாட்டி Chantawong அவர்கள் சொல்லித்தந்த தியான பயிற்சிகளே! உடலை அதிகமாக செயல்படுத்தாமல், அச்சிறுவர்கள் தியான முயற்சிகளில் ஈடுபட்டால், அவர்களால் உடல் சக்தியைக் காப்பாற்றமுடியும் என்றும், குளிரும், இருளும், பசியும் அதிகமாகப் பாதிக்காது என்றும் Chantawong அவர்கள் சொல்லித்தந்தது, அச்சிறுவர்களைக் காப்பாற்றியது.

'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்று தன் சீடர்களிடம் இயேசு கூறியதன் பொருளுக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள், தாய்லாந்து சிறுவர்கள்.

பாலைநிலத்தில், தனிமையைத் தேடிச்செல்வது அங்கேயேத் தங்குவதற்கு அல்ல, மாறாக, தனிமையில் பெற்ற இறை அனுபவத்தை, மக்களோடு பகிர்ந்துகொள்ளவே அந்தத் தனிமை. இதை நமக்குச் சொல்லித்தருகிறது இன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதி. பாலை நிலத்திற்கு இயேசுவும், மற்ற சீடர்களும் சென்றுள்ளனர் என்பதை அறிந்துகொண்ட மக்கள் அங்கும் அவர்களைத் தேடிச்சென்றனர். பாலை நிலமென்றும் பாராமல், தங்களைத் தேடி வந்த மக்களைக் கண்டதும் இயேசு நடந்துகொண்டது, நமக்கு மற்றும் ஒரு பாடமாக அமைகிறது.

மாற்கு நற்செய்தி 6: 34

இயேசு கரையில் இறங்கியபோது, பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். என்று இன்றைய நற்செய்தி முடிவடைகிறது. பணிகளில் மூழ்கியதால், உண்ணவும் நேரமின்றி தவித்த சீடர்களுடன் பாலை நிலத்தை நாடிச்சென்ற இயேசு, அங்கும் மக்கள் தங்களைத் தேடி வந்துள்ளனர் என்பதை அறிந்ததும்,  தனது தேவைகளையும், தன் சீடர்களின் தேவைகளையும் புறந்தள்ளி, மீண்டும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியைத் துவக்கினார் என்று இன்றைய நற்செய்தி முடிவடைகிறது.

இரண்டு சிந்தனைகளை இன்று நாம் மனதில் ஆழப்பதிப்போம். நமது தேவைகளுக்காக நேரம் ஒதுக்கும் சூழல்களிலும், அடுத்தவர் தேவை அதிகம் என்பதை நாம் உணர்ந்தால், நமது தேவைகளை ஒதுக்கிவிட்டு, அடுத்தவருக்கு உதவிக்கரம் நீட்டும் தாராள மனதை இறைவன் நமக்குத் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஞாயிறு சிந்தனை220718
21 July 2018, 15:30