தேடுதல்

காலநிலை குறித்த உச்சிமாநாட்டின் பங்கேற்பாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை காலநிலை குறித்த உச்சிமாநாட்டின் பங்கேற்பாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை   (Vatican Media)

காலநிலை நெருக்கடிக்கு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய கூட்டொருமை தேவை

கடனை மறுசீரமைத்தல் மற்றும் குறைத்தல், 2025-ஆம் ஆண்டளவில் ஒரு புதிய உலகளாவிய நிதி சாசனத்தை உருவாக்குதல், ஒரு வகையான சுற்றுச்சூழல் கடனை ஒப்புக்கொள்வது யாவும் காலநிலை மாற்றங்களைத் தணிப்பதில் பெரும் உதவியாக அமையும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சுற்றுச்சூழல், அதிக ஆதரவையும் பாதுகாப்பையும் பெற வேண்டும். சுற்றுச்சூழலை அழிப்பது கடவுளுக்கு எதிரான குற்றமாகும், இது தனிப்பட்டது மட்டுமல்ல, கட்டமைப்பு ரீதியானது, இது அனைத்து மனிதர்களையும் பெரிதும் ஆபத்தில் ஆழ்த்துகிறது, மேலும் தலைமுறைகளுக்கு இடையே ஒரு மோதலை கட்டவிழ்த்துவிட அச்சுறுத்துகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"காலநிலை நெருக்கடியில் இருந்து தட்பவெப்ப நிலைத்தன்மை வரை" என்ற தலைப்பில் நிகழும் உச்சிமாநாட்டின் பங்கேற்பாளர்களை, மே 16, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, காலநிலை மாற்றம் குறித்த தரவுகள் ஒவ்வொரு ஆண்டும் மோசமாக வளர்ந்து வரும் சூழலில், மக்களையும் இயற்கையையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பதையும் தனது உரையில் வலியுறுத்தினார்.

நாம் பணியாற்றுவது ஒரு வாழ்க்கை கலாச்சாரத்திற்கா அல்லது, மரண கலாச்சாரத்திற்கா என்று கேள்வியெழுப்பிய திருத்தந்தை, பூமியின் அழுகைக்கும், ஏழைகளின் வேண்டுகோளுக்கும் செவிசாய்க்க வேண்டும் என்று கூறியதுடன், இளைஞர்களின் உயர்ந்த இலட்சியங்கள் மற்றும் குழந்தைகளின் கனவுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று நீங்கள் பதிலளித்துள்ளீர்கள்! ஆகவே, அவர்களின் எதிர்காலம் அவர்களுக்கு மறுக்கப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது, ​​காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, சுற்றுச்சூழல் சிதைவு, உலகளாவிய ஏற்றத்தாழ்வுகள், உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் அவற்றால் பாதிக்கப்படும் மக்களின் மனித மாண்பிற்கு அச்சுறுத்தல் போன்ற அமைப்புரீதியான சவால்களை நாம் எதிர்கொண்டுள்ளோம் என்று விளக்கிய திருத்தந்தை, இந்தச் சிக்கல்களை அவசரமாகவும் கூட்டாகவும் எதிர்கொள்ளவில்லை என்றால், அவை நமது மனித குடும்பத்திற்கும், மற்ற உயிரினங்களுக்கும் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் இருத்தலியல் அச்சுறுத்தல்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றும் உரைத்தார்.

இந்தக் காலநிலை மாற்றத்தினால் பெண்கள் குழந்தைகள் எவ்வாறு எத்தனை விழுக்காடு பாதிக்கப்படுகின்றனர் என்பதையும், அதிலும் குறிப்பாக, ஒட்டுமொத்தமாக எவ்வளவு ஏழை எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பதையும் புள்ளிவிபரங்களுடன் புலப்படுத்தினார் திருத்தந்தை.

மாசுபடுத்தும் தொழில்கள் வழியாக, குறுகிய கால ஆதாயங்களைப் பெற பேராசையுடன் நாட்டம் மற்றும் தவறான தகவல்களின் பரவல் ஆகியவற்றால் ஓர் ஒழுங்கான முன்னேற்றம் தடுக்கப்படுகிறது என்பதையும், இது குழப்பத்தை உருவாக்குவதுடன், அதன் பாதையில் மாற்றத்திற்கான கூட்டு முயற்சிகளைத் தடுக்கிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

மேலும் இந்த உச்சிமாநாட்டில் இருந்து வெளிவரும் தரவுகள் யாவும், காலநிலை மாற்றத்தின் விளைவுகள், நீர், காற்று, உணவு மற்றும் எரிசக்தி அமைப்புகளை அச்சுறுத்தும் வகையில் நமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் உள்ளது என்பதையும், பொது நல வாழ்விற்கும், நலனுக்கும் எவ்வாறு அச்சுறுத்தல்களாக அமைகின்றன என்பதையும் நமக்கு காட்டுகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

சமூகங்கள் சிதைவதையும், குடும்பங்கள் வலுக்கட்டாயமாக சிதறடிக்கப்படுவதையும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம் என்றும், வளிமண்டல மாசுபாடு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உயிர்களை முன்கூட்டியே இறக்கச் செய்கிறது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, 350 கோடிக்கும் அதிகமான மக்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வாழ்கின்றனர் என்றும், இது அவர்களை கட்டாய இடம்பெயர்வுக்குத் தூண்டுகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

இறுதியாக, இந்தக் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதமாக, உலகளாவிய அணுகுமுறை மற்றும் விரைவான மற்றும் உறுதியான செயல்பாடு, புவி வெப்பமடைதல் வளைவை (curves) மாற்றுவதற்கான கூட்டு முயற்சிகள், வளிமண்டலத்தில் உள்ள பெரிய அளவிலான கார்பன் டை ஆக்சைடு, பல தலைமுறைகளாக நீடிக்கும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்தின் வழியாக அகற்றப்படுவதற்கான முயற்சிகள், ஒரு புதிய நிதி கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியம் ஆகிய நான்குவிதமான பரிந்துரைகளையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

பாப்பிறை அறிவியல் கல்விக் கழகமும், பாப்பிறை சமூக அறிவியல் கல்விக் கழகமும் இணைந்து இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2024, 14:39