தேடுதல்

உரோமையிலுள்ள கிறிஸ்தவ நிலத்தடிக் கல்லறைக் குகை உரோமையிலுள்ள கிறிஸ்தவ நிலத்தடிக் கல்லறைக் குகை  (Frank Bach - frank@frankix.dk)

கிறிஸ்தவ நம்பிக்கை மறைசாட்சிகளால் சாட்சியமளிக்கப்படுகிறது!

உயிர்த்த கிறிஸ்துவில் அவருடைய பேரின்பத்தையும் அமைதியையும் பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கும் கடவுளைச் சந்திக்கும் இலக்கை நோக்கி செல்லும் வழியில், நாம் அனைவரும் திருப்பயணிகள் என்பதை கிறிஸ்தவ நிலத்தடிக் கல்லறைக் குகைகள் நமக்குக் காட்டுகின்றன : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தூது அமைப்புவிதித் தொகுப்பு 'நற்செய்தி அறிவியுங்கள்' (Praedicate Evangelium) என்பதைப் போற்றும்வேளை, நீங்கள் திருப்பீடத்தின் பெயராலும், முழு திருஅவையின் பெயராலும், இத்தாலியின் கிறிஸ்தவ நிலத்தடிக் கல்லறைக் குகைகளின் (catacombs) நம்பிக்கை மற்றும் கலைகளைப் பராமரிப்பவர்களாக இருக்கிறீர்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித தொல்லியல் துறைக்கான பாப்பிறை அமைப்பின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் பங்கேற்பாளர்களை மே 17, இவ்வெளியன்று திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, அவர்களின் அர்ப்பணம் நிறைந்த இந்தப் பணிக்காக அவர்கள் அனைவரையும் பாராட்டினார்.

வரும் யூபிலி ஆண்டு 2025-இன் கருப்பொருள் 'நம்பிக்கையின் திருப்பயணிகள்' என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இது உண்மையில், கிறிஸ்தவ நிலத்தடிக் கல்லறைக் குகைகள் (catacombs) காட்டும் நம்பிக்கையின் பாதைகளில் துல்லியமாகச் செல்கிறது என்றும், உங்களின் கூட்டத்தின் மையப்பொருளுடன் இது ஒன்றிணைந்து செல்கிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

கிறிஸ்தவ நிலத்தடிக் கல்லறைக் குகைகள் எல்லாமே நம்பிக்கையைக் குறித்துபேசுகின்றன அதாவது,  மரணத்திற்கு அப்பாற்பட்ட வாழ்க்கை, ஆபத்துகளிலிருந்து மற்றும் மரணத்திலிருந்து விடுபடுவது,  நல்ல மேய்ப்பரான கிறிஸ்துவின் வழியில் விண்ணகத்தின் பேரின்ப வாழ்வை அடைவது குறித்துப் பேசுகின்றன என்றும் விளக்கினார்.

எனவே கிறிஸ்தவ நிலத்தடிக் கல்லறைக் குகைகளுக்கான திருப்பயணம் என்பது கிறிஸ்தவ எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையின் அர்த்தத்தை அனுபவிக்கும் ஒரு பயணத்திட்டமாகும் என்றும், உயிர்த்த கிறிஸ்துவில் அவருடைய பேரின்பத்தையும் அமைதியையும் பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கும் கடவுளைச் சந்திக்கும் இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் நாம் அனைவரும் திருப்பயணிகள் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது என்றும் விவரித்தார் திருத்தந்தை.

கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, மறைசாட்சிகளால் சாட்சியமளிக்கப்படுகிறது என்ற காரணத்தின் அடிப்படையில், யூபிலி விழாவைக் கருத்தில் கொண்டு, மறைசாட்சிகளின் கல்லறைகளை முன்னிலைப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு நான் உங்களை மனதார வாழ்த்துகிறேன் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

மேலும் இந்த மறைசாட்சிகளின் கல்லறைகளுக்கு முன்னால் நம்மை நிறுத்துவது, அவர்களின் துணிச்சல் நிறைந்த முன்மாதிரியை நமக்கு நேருக்கு நேர் கொண்டு வருகிறது என்றும், இது எப்போதும் பொருத்தமானதாக அமைவதுடன், இன்று கிறிஸ்தவ விசுவாசத்திற்காகத் துன்புறுத்தப்படும் பல சகோதரர் சகோதரிகளுக்காக இறைவேண்டல் செய்யவும் நம்மை அழைக்கிறது என்றும் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2024, 15:28