தேடுதல்

திருஅவையின் கதாநாயகர் தூய ஆவியார்! : திருத்தந்தை பிரான்சிஸ்

அடிமைத்தளையில் உழல்வோர் அனைவருக்கும் கடவுள் அவர்களை மறப்பதில்லை, ஒருவரைக் கூட மறக்கமாட்டார், மேலும் ஒவ்வொருவருக்கும் அவர் தம்முடைய தூய ஆவியைக் கொடுக்கிறார் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இத்தாலியின் வெரோனா நகருக்குத் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 18, இச்சனிக்கிழமையன்று, Marcantonio Bentegodi வெளியரங்கில் நிகழ்ந்த பெந்தக்கோஸ்து பெருவிழாத் திருவிழிப்புத் திருப்பலியில் வழங்கிய மறையுரை.

அன்பான சகோதரர் சகோதரிகளே! இன்று நாம் கேட்ட கடவுளின் வார்த்தை இந்த நாளை ஒளிரச் செய்கிறது, "நீதியும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்" என்ற நிகழ்வை ஆழமாகப் படிக்க அனுமதிக்கிறது மற்றும் உங்கள் மத்தியில் எனது வருகைக்கான முழு அர்த்தத்தையும் தருகிறது.

இன்று நாம் பெந்தக்கோஸ்து பெருவிழாவைத் திருவிழிப்புத் திருப்பலியில் கொண்டாடுகிறோம். திருவிவிலியத்தில் நாம் கேட்ட சில வார்த்தைகள் இந்தக் கருத்துக்களை நமக்கு வெளிப்படுத்துகின்றன. யோவேல் நூல் 'கனவுகள்' மற்றும் 'இலட்சியங்கள்' பற்றி பேசுகிறது (காண்க. யோவே 3:1); உரோமையர் திருமடல் 'நம்பிக்கை'  மற்றும் ''எதிர்நோக்கு' பற்றி பேசுகிறது (காண்க. உரோ 8:24, 25); யோவான் நற்செய்தி 'தாகம்' (காண்க.யோவா 7:37) பற்றி பேசுகிறது. இந்த வார்த்தைகள் அனைத்தும் தூய ஆவியாரைக் குறிக்கின்றன. பெந்தக்கோஸ்து மற்றும் திருஅவை வாழ்வின் கதாநாயகரான அவர், இப்போது, ​​இங்கே, இந்த வழிபாட்டில் நம்மோடு இருக்கிறார்.  

பெந்தக்கோஸ்து நாளாகிய இன்று, "நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்” (காண்க. யோவே 2:28) என்ற ஆண்டவரின் வார்த்தையை அதனுடைய எல்லா ஆற்றலோடும் புதுமையோடும் நாம் நாம் வரவேற்க வேண்டும். "அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்" (வச.29) என்கிறார் ஆண்டவர். இன்று எத்தனை அடிமைத்தனத்தை நாம் நினைக்காமல் இருக்க முடியும்? ஒரு சமூக நிறுவனமாக அடிமைத்தனம் இனி இல்லை, ஆனால் எத்தனை ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் கூட அடிமைகளாக இருக்கிறார்கள்! கடவுள் அவர்களை மறப்பதில்லை, ஒருவரைக் கூட மறக்கமாட்டார், மேலும் ஒவ்வொருவருக்கும் அவர் தம்முடைய தூய ஆவியைக்  கொடுக்கிறார்.

இந்த இறைவாக்கு இறைமக்களின் தூய்மையை நினைவுபடுத்துகிறது. இது ஒவ்வொருவரின் மீதும் பொழியப்படும் தூய ஆவியாரின் அபரிமிதமான அருளின் பயனாகும். ஏழையும் பாவிகளுமாகிய நம்மை உள்ளடக்கிய திருஅவைக்கு எப்போதும் 'தூய்மைப்படுத்துதல் தேவை" (Lumen Gentium, 8) என்பதை நாம் அறிவோம். திருஅவையின் இதயத்தில் இது இன்னும் புனிதமானது.

இறைமக்களின் புனிதம் உலகளாவியது, ஆனால் அது ஒரே மாதிரியானது அல்ல. அது எல்லையற்ற பன்முகத்தன்மை கொண்டது. ஏனென்றால், திருமுழுக்குப் பெற்ற அனைவரும் ஒரே தூய ஆவியாரின் வழியாகப் புனிதத்தன்மைக்கு அழைக்கப்படுகிறார்கள். ஆனால் எல்லாரும் ஒரேமாதிரியானவர்கள் அல்ல, ஒவ்வொருவரும் வித்தியாசமானவர் மற்றும் தனித்துவமானவர். வேற்றுமையில் ஒற்றுமையை உருவாக்கும் தூய ஆவியாரின் அரும்செயல் இது!

புனித பவுலும் உரோமையருக்கு எழுதிய திருமடலில் (காண்க. 8:22-27), "கவனமான" மனப்பான்மைக்கு நம்மை மீண்டும் கொண்டு வருகிறார், நாம் "நம்பிக்கையில்" மீட்கப்பட்டோம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார் (வச. 24).

"இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்" என்கிறார் பவுல். மனிதகுலம் மற்றும் பூமியின் வரலாற்றில் ஓர் உழைப்புத் தொடர்கிறது. பூமியையும் அதில் வசிக்கும் நம்மையும், குறிப்பாக ஏழைகள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் அனைவரையும் வலியால் அழ வைக்கும் ஓர் உழைப்பு அது.

கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட பெரும் வலிக்குப் பிறகு, ஒருபோதும் குணமடையாத போரின் வலி மோசமடைந்து, சிந்திக்க முடியாத மற்றும் மிகவும் தீவிரமான விகிதாச்சாரத்தை எடுத்துள்ளது. இன்றும், போராலும் அதன் விளைவுகளாலும் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து வெளிப்பட்ட அமைதிக்கான அழைப்பு மற்றும் விண்ணை முட்டும் நம்பிக்கை, இங்கு வெரோனாவில் அமைதிக்கான அரங்கம் என்று அழைக்கப்படும் பாதையில் வெளிப்படுவதைக் கண்டேன், அதற்கு நான் இன்று காலை எனது பங்களிப்பைச் செய்ய விரும்பினேன்.

அமைதியைவிட நாம் எதையும் உணரவில்லை. நாம் நம்பிக்கையிலும் எதிர்நோக்கிலும் இருக்கின்றோம். நமது வலுவற்றநிலையில் நமக்கு உதவி செய்வதற்கும், கடவுளுடைய திட்டத்தின்படி நமக்காகப் பரிந்து பேசுவதற்கும் தூய ஆவியானவர் நமக்கு எவ்வளவு தேவை என்பதை உணர வைக்கிறது (உரோ 8:26-27). ஏனென்றால், கடவுளின் திட்டம் எப்பொழுதும் அமைதி மட்டுமே என்பதில் சந்தேகமில்லை.

“யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்" (காண்க. யோவா  7:37-38) என்றுரைக்கின்றார் இயேசு. ஆம், ஆண்டவரே, நாங்கள் தாகமாய் இருக்கிறோம்! நீர் எங்களுக்கு வாக்களித்த வாழ்வுதரும் தண்ணீருக்காக நாங்கள் தாகமாய் இருக்கிறோம். எங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் முழுமையையும் தரும் உமது அன்பிற்காக நாங்கள் தாகமாய் இருக்கிறோம், துன்பப்படுபவர்களை புண்படுத்தாத உம் மகிழ்ச்சிக்காக நாங்கள் தாகமாய் இருக்கிறோம். உலகம் எங்களுக்குத் தரமுடியாத, ஆனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் உமது மேசையில் உண்ண வரும்போது நீர் தருகின்ற உமது அமைதிக்காக நாங்கள் தாகமாய் இருக்கிறோம். இதற்காக நாங்கள் உம்மைப் போற்றி நன்றி செலுத்துகிறோம்!

ஆனால் பெந்தக்கோஸ்து திருவிழிப்பு நாளாகிய இன்று, எங்களுடைய தாகத்தை மட்டும் உம்மிடம் கொண்டு வர நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அதேவேளையில் எங்கள் சகோதரர் சகோதரிகள் பலரின் தாகத்தை உம்மிடம் கொண்டுவருவதற்காக இங்கே நாங்கள் இங்கு கூடி வந்துள்ளோம். பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய மக்களின் தாகத்தை நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம், உக்ரேனிய மக்கள் மற்றும் இரஷ்ய மக்களின் தாகத்தை, ரோஹிங்கியா, மியான்மார், சூடானிய மற்றும், காங்கோ மக்களின் தாகத்தை உம்மிடம் கொண்டு வருகின்றோம்.

அவர்கள் அனைவரையும் நீரே அறிவீர், ஆண்டவரே, நாங்கள் உம்மிடம் வருகிறோம், ஏனென்றால் நீரே எங்கள் அமைதி, உமது தூய ஆவியாரின் வாழ்வுதரும் தண்ணீர் இல்லாமல் எங்கள் இதயங்கள் மன்னிக்க இயலாத, ஒப்புரவு செய்ய இயலாத மற்றும் உடன்பிறந்த உணர்வில்லாத கல்லான இதயங்களாக இருக்கின்றன.

சகோதரர் சகோதரிகளே, சிறிது நேரத்தில், இந்தப் பலிபீடத்தின் மீது, இயேசு தம்மையே வாழ்வுதரும் தண்ணீரின் ஊற்றாகக் கொடுப்பார், கல்வாரியில் பலியாக்கப்பட்டு உயிர்த்தெழுந்த செம்மறியின் இதயத்திலிருந்து நம்மைத் தூய்மையாக்கவும் நமக்கு மறுபிறப்பு அளிக்கவும் வாழ்வுதரும் தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

ஆகவே, அவரை உற்றுநோக்குவோம், அவரிடம் வருவோம், நமக்காகவும், இந்த நகரத்திற்காகவும், இந்தக் கோவிலுக்காகவும் உலகம் முழுவதற்காவும் அவரிடம் மன்றாடுவோம். தூய ஆவியாரே வாரும், உமது நம்பிக்கையாளர்களின் இதயங்களை நிரப்பி, அவற்றில் உம் அன்பின் தீயை மூட்டியருளும். ஆமென்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 May 2024, 10:12