தேடுதல்

இயேசுவைச் சந்தித்த மகிழ்ச்சியை அனைவருக்கும் தாருங்கள்

அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆட்சி செய்யும் உலகத்தை உருவாக்க திறமைகளையும் கொடைகளையும் பிறருக்காகத் தருவோம்.

ஜெயந்த் ராயன், வத்திக்கான்

திருத்தூதுப் பயணமாக இத்தாலியிலுள்ள வெரோனா பகுதிக்குச் சென்ற  திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள் புனித ஜெனோ சதுக்கத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சந்தித்தார்.

அன்புள்ள சிறுவர், சிறுமியரே! மிகவும் இளமையாக இருக்கும் உங்களுக்கு நான் சொல்ல விரும்புகின்றேன்: எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இயேசுவைச் சந்தித்த மகிழ்ச்சியை அனைவருக்கும் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். நீங்கள் என்னிடம் சரியாகச் சொல்வீர்கள், ''நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது! சில நேரங்களில் நம் வாழ்வில் பல துயரமான நிகழ்வுகளும் நடக்கின்றன மற்றும் உலகத்தில் பல மோசமான நிகழ்வுகளும் நடைபெறுகின்றன'' என்று. இது உண்மைதான், ஆனால் நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது: இறைவன் நமக்குத் தரும் மகிழ்ச்சி புன்னகைப்பதோ அல்லது வேடிக்கை பார்ப்பதோ அல்ல, மாறாக வேறு ஒன்று. தூய ஆவியாரின் கொடையாக நாம் உண்மையான மகிழ்ச்சியைப் பெறுகிறோம், இடையூறுகளுக்கு மத்தியிலும் இது ஓர் ஆறுதல், ஏனென்றால் அந்த வலிமைதான் வாழ்க்கையில் அனைத்து நிகழ்வுகளையும் எதிர்கொள்ள வைக்கிறது. நம்மை அன்பு செய்யும் ஒருவர் நம்மைத் தனியே விட்டு விடாமல் நமக்குத் துணையாக இருப்பதை உணரச் செய்கிறது. அது வேறு யாருமல்ல இயேசுவே அவர்.

இன்று உலகில் பல போர்கள் நடைபெறுகின்றன. உங்களைப் போன்ற பல குழந்தைகள் மற்றும் இளையோர் வன்முறை, உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர், அடிக்கடி போர் குண்டுகளுக்கு மத்தியில் இறந்துபோகின்றனர்.  எதற்காக இந்தப் போர்கள்? இறைவனிடமிருந்து வரும் மகிழ்ச்சியைத் தேடுவதற்குப் பதிலாக, மகிழ்ச்சியின் தவறான எண்ணங்களை பின்பற்றிச் செல்ல முனைகிறோம். மகிழ்ச்சி  என்பது செல்வத்தைப் பொறுத்தது, பிறரை விட முக்கியமானது, எப்போதும் முதன்மையாக இருப்பது என்று எண்ணுகிறோம். நமக்குள் வாக்குவாதங்கள், யார் முதலில் வருவார்கள் என்கிற போட்டி மனப்பான்மை, இவை அனைத்தும் நம்மிடையே போரைத் தூண்டுகின்றன, நாம் ஒருவருக்கொருவர் எதிராக மாறுகிறோம்.

சிறுவர் சிறுமியரே! நீங்கள் அமைதியை உருவாக்குபவர்களாக இருக்கவேண்டும். அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆட்சி செய்யும் உலகத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் பெற்ற கொடைகள் மற்றும் திறமைகளை நம் கைகளில் இறுக மூடிக்கொண்டு அவற்றை நமக்காக மட்டுமே வைத்திருக்க முயற்சிக்கிறோம். எப்போதும் தரவரிசையில் முதன்மையானவர்களாக வர முயற்சிக்கிறோம். இதனால் மற்ற அனைவரும் தோற்கடிக்கப்படும் எதிரிகளாக மாறுகிறார்கள். மாறாக, நாம் நம் கைகளைத் திறந்து மற்றவர்களை நம் நண்பர்களாக, சகோதரர்களாக, ஒருவருக்கு ஒருவர் பரிசாகக் கருதி ஒன்றாக நடக்கலாம். இதை நீங்கள் உடனே செய்ய ஆரம்பிக்கலாம். உங்களிடம் பல திறமைகள் உள்ளன.

ஒருவருக்கு ஒருவர் உதவுங்கள். யார் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று சண்டையிடாமல், ஒருவரையொருவர் நேசிக்கவும், ஒன்றாக வளரவும் முயற்சி எடுங்கள். நீங்களும் அதைத்தான் செய்ய விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன்! இந்தப் பயணத்தில் இயேசு உங்கள் உடனிருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அவர் உங்களை அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாக உருவாக்குவதற்கும், உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதற்கும் எப்போதும் உங்களுடன் இருக்கும் நண்பராக இருப்பார்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2024, 17:15